நிர்வாணம் வேறு…ஆபாசம் வேறு… ரெஹானா பாத்திமா வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

பெண்ணின் நிர்வாணத்தை ஆபாசமானதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர ரெஹானா பாத்திமா. பால் ரீதியிலான கற்பொழுக்கம் காரணமாக பெண்கள் சந்திக்கும் உரிமை மறுப்புகளுக்கும், அடக்கு முறைகளுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு, தனது அரை நிர்வாண உடலில் மகன் மற்றும் மகள் ஓவியம் வரையும் காணொலி ஒன்றை சமூக ஊடங்களில் வெளியிட்டார். இந்த காணொலிக்கு Body Art and Politics ( உடலின் கலை மற்றும் அரசியல் ) என்றும் தலைப்பிட்டார்.

இந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரெகானாவின் இந்த செயலை சிலர் ஆதரித்தனர். பலர் எதிர்த்தனர். நிகழ் காலத்தில், பெண் உடலைப் பற்றி நிலவும் இறுக்கமான கருத்து போக்குகளுக்கு இந்த காணொலி பதில் சொல்வதாகவும், வரலாற்றுச் சூழலில் வைத்துக் கொண்டு இவற்றை மதிக்க வேண்டும் என்றும் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

இறுதியாக, ஆபாச நோக்கத்திற்காக சிறார்களை பயன்படுத்துதல், பாலியல் மனநிறைவுக்காக சிறார்களை ஊடகங்களில் பயன்படுத்துதல், ஆபாச செயல்களில் ஈடுபடுதல், தகவல் தொழில்நுட்பம் மூலம் முறையற்ற வகையில் சிறார்களை காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் இந்த வழக்குப்பதிவை ரத்து செய்து உத்தரவிட்டது. நீதிபதி கௌசர் எடப்பகத் தனது தீர்ப்பில், “பிறந்த மேனியை பாலியலுடன் இணைக்கக்கூடாது. பெண்ணின் உடலை ஆடையில்லாமல் பார்ப்பது இயல்பாகவே பாலியல் செயல்களில் ஒன்றாக கருதக் கூடாது. அதே போன்று, ஒரு பெண்ணின் உடலை நிர்வாணமாக சித்தரிப்பதை அநாகரீகமாகவோ, பாலியல் ரீதியாக பிறரை தூண்டும் விதமாகவோ அல்லது முறையற்ற வகையாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது. அனைத்தையும் , அதற்குரிய சூழலில் வைத்து மட்டுமே தீர்மானிக்க வேண்டும். இங்கு, மனுதாரரின் அரசியல் வெளிப்பாடும், குழந்தைகளின் கலை செயல்திறனும் தான் வெளிப்படுகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் நீதிபதி தனது தீர்ப்பில், கலை நிகழ்த்தும் விதமாக தாயின் மேல் உடலில் ஓவியம் வரைவதை நிஜமான அல்லது உருவகப்படுத்தப்பட்ட பாலியல் செயலாக கருத முடியாது என்று தெரிவித்தார். ஒழுக்கமும் குற்றப் பழியுடைமையும் ஒன்றோடு ஒன்று பொருந்தி போவதில்லை என்று தெரிவித்த நீதிபதி, தார்மீக ரீதியிலான தவறுகள் என்று கொள்ளப்படுவது எல்லாம், சட்டம் அங்கீகரித்த தவறாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.