சமுதாய அடிப்படை அமைப்பு மற்றும் வங்கிக்கான சமூக அபிவிருத்தி சவால் கிண்ணம் -2023.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலக பிரிவு ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட சமுர்த்தி சமுதாய மட்ட அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்டு வந்த குறித்த மென்பந்து சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று முன்தினம்(27) செவ்வாய்கிழமை பி.ப 01.30 மணியளவில் கரைதுறைபற்று பிரதேச சபை மைதானத்தில் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு.மு.முபாரக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பதில் மாவட்டச் செயலாளர் திரு.க.கனகேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.சி.குணபாலன் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) அவர்களும் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திரு.செல்வரட்ணம் அவர்களும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி.ந.ரஞ்சனா அவர்களும் கரைதுறைபற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள் அவர்களும் வெலிஓயா பிரதேச செயலாளர் திரு.W.D.நிஸாந்த சிறிமன்ன அவர்களும் கௌரவ விருந்தினர்களாக பிரதேச மட்ட சமுர்த்தி சமுதாய மட்ட அமைப்புக்களின் தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பிரதேச சமுர்த்தி சமுதாய மட்ட அமைப்புக்களின் 06 அணிகளும் 06 பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அணிகளிலும் இருந்து இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய அணிகள் மோதிக்கொண்டன.

இறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகிய கரைதுறைபற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கான அணியினர்களுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் கரைதுறைபற்று சமுர்த்தி சமுதாய மட்ட அமைப்பு அணியினர் வெற்றிக் கிண்ணத்தினையும் ரூபா 50000.00 பணப்பரிசிலினையும் தமதாக்கினர்.

இரண்டாம் இடத்தினைப் பெற்ற அணியினர் வெற்றிக் கிண்ணத்தினையும் ரூபா 25000.00 பணப்பரிசிலினையும் தமதாக்கினர்.

அதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்களுக்கான இறுதிப் போட்டியில் கரைதுறைபற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அணியை எதிர்த்து களம் இறங்கிய புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அணி வெற்றிக் கிண்ணத்தினையும் ரூபா 40000.00 பணபரிசிலினையும் தமதாக்கினர். இரண்டாம் இடத்தினை பெற்ற அணியினருக்கு ரூபா 20000.00 பணப்பரிசிலும் வெற்றிக் கேடயமும் வழங்கப்பட்டது.

குறித்த போட்டியில் வீர வீரங்கனைகளுக்கு ஊக்கிவிப்புத் தொகையாக 06 ஓட்டங்களுக்கு ரூபா 500.00 வீதமும் 04ஓட்டங்களுக்கு ரூபா 300.00 வீதமும் ஒரு விக்கெட்டுக்கு ரூபா 500.00 வீதமும் அணியினை பிரதிநிதித்துவம் செய்த பெண் வீராங்கனைகளுக்கு தலா ரூபா 1000.00 வீதமும் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

நிகழ்வில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.முகுந்தன் அவர்களும் மாவட்ட செயலக சமுர்த்தித் திணைக்கள கணக்காளர், சிரேஸ்ட முகாமையாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், பிரதேச செயலக தலைமைப்பீட முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் விளையாட்டு வீரர்கள் சமுதாய அடிப்படை அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.