தையிட்டிப் போராட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தப் பலாலி பொலிஸார் புது வியூகம்!

தையிட்டியில் அமையப் பெற்றுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராகப் போராடுவதற்கு வழமையாக இடம் வழங்கும் காணி உரிமையாளர் பலாலி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் ஊடகங்களிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

தையிட்டி விகாரைக்கு எதிரான 4ஆம் கட்டப்போராட்டம் நேற்று மாலை ஆரம்பமாகி தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார் கஜேந்திரன் எம்.பி.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தையிட்டி விகாரைக்கு எதிராக வீதியில் நாம் போராட பொலிஸார் தடைகளை ஏற்படுத்தினர். இதையடுத்து விகாரைக்கு அருகிலுள்ள தனியார் காணிக்குள் நின்று நாம் கடந்த 3 தடவைகளும் போராட்டத்தை முன்னெடுத்தோம். இம்முறை அந்தக் காணிக்குள் நாம் செல்வதை தடுப்பதற்குப் பலாலி பொலிஸார் முயற்சித்துள்ளனர்.

காணியின் உரிமையாளரைப் பலாலி பொலிஸ் நிலையத்துக்கு நேற்றுக் காலை அழைத்துள்ளனர். நீங்கள் எத்தனை தடவைகள் காணி வழங்கினீர்கள்? ஏன் காணி வழங்குகின்றீர்கள்? என்று கேள்வி எழுப்பிய பொலிஸார் அவரை உளவியல் ரீதியாக அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

காணியை வழங்கினால் வழக்கு நடவடிக்கைகளில் தானும் தொடர்புபடவேண்டி வரும் என்ற அச்சத்தில் அவர் உள்ளார். இதையடுத்துப் பொலிஸார் அந்தக் காணிக்குள் பிரவேசிக்க முடியாதவாறு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

எங்கள் சொந்த நிலத்துக்குள் நாம் செல்ல முடியாது. ஆனால், இந்த நிலத்துடன் தொடர்பேயில்லாத சிங்கள மக்களை பாதுகாப்புடன் எங்கள் காணிக்குள் அடாத்தாக அமைக்கப்பட்ட விகாரைக்கு அழைத்து வருகின்றார்கள்.

எங்கள் மக்களுக்கு அன்னதானத்தையும் வழங்கி, விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி இராணுவம் தமக்கு வெள்ளையடிக்க முடியும் என்று நம்பினால் அது அவர்களின் முட்டாள்தனம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.