ஜப்பான் அணுமின் ஆலை நீரை கடலில் திறந்துவிட தென் கொரியா ஆதரவு.

ஜப்பானில் சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் கடுமையாக சேதமடைந்த புகுஷிமா அணுமின் நிலையம் மூடப்பட்டது. அதிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பானின் திட்டம் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் என்று நம்புவதாக தென் கொரியா கூறியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகளின் அணுசக்தி அமைப்பு (IAEA), பெரும் சர்ச்சைக்குரிய இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்ததில் போதுமான அளவு பாதுகாப்பு இருப்பதாக கூறியிருந்தது. இந்நிலையில், தென் கொரியா, மே மாத இறுதியில் ஆலையில் தானாக செய்த ஆய்வின் அடிப்படையிலும், ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அளித்த மதிப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையிலும் புகுஷிமா அணுமின் ஆலையிலிருந்து பசிபிக் பெருங்கடலில் சுமார் 10 லட்சம் டன்களுக்கு மேல் சுத்திகரிக்கப்பட்ட நீரை வெளியிடுவதில் எந்த ஆபத்தும் இல்லை என்று தென் கொரியா அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இந்தத் திட்டம் ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு உட்பட அனைத்து சர்வதேச தரத்தையும் பூர்த்தி செய்கிறது” என்று அரசாங்க கொள்கை ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் அமைச்சர் பேங் மூன்-கியூ சென்ற வாரம் ஒரு மாநாட்டில் தெரிவித்திருந்தார். வெளியிடப்படும் நீரின் பாதுகாப்பை சர்வதேச அணுசக்தி அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி உறுதி செய்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “இது குறித்த அச்சங்களை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். ஆனால், எங்கள் முடிவுகள் சரியான அடிப்படையிலேயே அமைந்துள்ளது. இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த கொள்கையை நாங்கள் கவனித்து வருகிறோம். தற்போதுள்ள மிகக் கடுமையான தரநிலைகளோடு நாங்கள் இதை மதிப்பீடு செய்து வருகிறோம்,” என்றார்.

இந்த திட்டத்தற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் சுங்கத்துறை 10 ஜப்பானிய மாகாணங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, கதிரியக்கப் பொருட்களுக்கான சோதனையை சீனா அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.

கடலில் இந்த நீரை வெளியேற்ற ஜப்பானுக்கு உள்ள சட்டப்பூர்வமான அதிகாரம், அதன் சுத்திகரிப்பு உபகரணங்களின் நம்பகத்தன்மை மற்றும் அதன் கண்காணிப்பு திட்டங்களின் முழுமை ஆகியவற்றில் ஜப்பானிய தரப்பில் சிக்கல்கள் இருப்பதாக சீனா கருதுகிறது. சர்வதேச அணுசக்தி அமைப்பு தயாரித்த அறிக்கையில், அனைத்து நிபுணர்களின் கருத்துக்களும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை எனவும் சீனா குற்றஞ்சாட்டி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.