சமைத்த உணவில் இரண்டு தக்காளியைப் பயன்படுத்திய கணவன்! ஆத்திரமடைந்து வீட்டை விட்டு வெளியேறிய மனைவி

மத்திய பிரதேசத்தில் கணவர் ஒருவர் தான் சமைத்த உணவில் இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியதால், அவரது மனைவி ஆத்திரமடைந்து வீட்டை விட் டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பாமர மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் காய்கறிக்கடை வியாபாரி ஒருவர் ஒருபடி மேலே சென்று தக்காளியின் பாதுகாப்பிற்காக பவுன்சர்களை நியமித்திருந்தார்.

தக்காளியின் அதிக விலைகள் நுகர்வோரை பாதிப்பது மட்டுமல்லாமல், உணவகங்கள், உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் இந்த பல்துறை மூலப்பொருளை பெரிதும் நம்பியிருக்கும் பிற வணிகங்களுக்கும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன.

மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்டோலில் சந்தீப் பர்மன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி பர்மன். சந்தீப் பர்மன் தான் சமைத்த உணவில் இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியுள்ளார். இதனால் கோபம் அடைந்து ஆர்த்தி பர்மன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உணவகம் வைத்திருக்கும் சந்தீப் பர்மன், தனது மனைவி ஆர்த்தி பர்மனைக் கண்டுபிடித்து தருமாறு காவல்துறையை அணுகினார்.

அப்போது அவர், “என் மனைவி ஆர்த்தி பர்மன் எனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறி ஒரு பேருந்தில் ஏறினார். நான் அவர்களை மூன்று நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். மனைவியின் புகைப்படத்தையும் காவல்துறையிடம் கொடுத்தேன். ஆனால் அவர்களால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், நான் என் மனைவியிடம் கேட்காமல் உணவில் தக்காளி சேர்த்ததால் மனைவி வருத்தமடைந்ததார். அது குறித்து வாக்குவாதம் செய்தேன். நான் தக்காளி சேர்ப்பது என் மனைவிக்கு பிடிக்கவில்லை” என்று கூறினார்.

பின்பு சந்தீப் பர்மன், தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஷாஹ்டோலின் அலுவலக அதிகாரி சஞ்சய் ஜெய்ஸ்வால் “ஆர்த்தி தனது கணவருடன் வாக்குவாதத்திற்குப் பிறகு தனது வீட்டை விட்டு வெளியேறி, உமாரியாவில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றார். கணவன், மனைவி இருவரையும் பொலிசார் பேச வைத்துள்ளனர். அவர் விரைவில் திரும்புவார்” என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.