சதுரகிரி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ! 3,000 பக்தர்கள் தவிப்பு

தமிழ்நாட்டின் சதுரகிரி மலைப்பாதையில் 2வது நாளாக தீ மளமளவென பரவி வருவதால் கோவில் வளாகத்திலேயே 3000 பக்தர்கள் தங்கியுள்ளனர்.

மதுரையின் சாப்டூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்.

இந்த கோவிலில் சிவலிங்கம் கழுத்து பகுதி சாய்ந்த நிலையில் சுயம்புவாக காட்சி தருகிறார், அமாவாசை, பௌர்ணி, பிரதோசம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மட்டும் வனத்துறையினர் பக்தர்களுக்கு அனுமதி வழங்குகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஆடி அமாவாசை என்பதால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நேற்றிரவு திடீரென நாவலூற்று பகுதியில் காட்டுத்தீ பரவியது, சதுரகிரி கோவிலுக்கு செல்லும் மலைப்பகுதியில் தீ பரவத் தொடங்கியது.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பிடித்திருக்கலாம் என தெரிகிறது.

10 ஆயிரம் பக்தர்கள் கீழே இறங்கிய நிலையில், 3 ஆயிரம் பேர் சிக்கிக்கொண்டனர், தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்கள் கீழே இறங்க வனத்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.

தொடர்ந்து தீயை அணைக்க 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் முயன்றுவருகின்றனர், இன்றும் 2வது நாளாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பாதிப்பு ஏதுமில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.