அதானி கேபிடல் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்ற அதானி

அதானி குழுமத்தின் கீழ் இயங்கும் நிதிச் சேவை வணிக நிறுவனத்தை அமெரிக்காவின் முதலீட்டு நிறுவனமான பெயின் கேபிடலுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்திய தொழிலதிபர் அதானி கையெழுத்திட்டுள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, நிதிச் சேவை வணிகத்தில் நுழைந்த அதானி குழுமம், அதிலிருந்து வெளியேறும் முகமாக, இந்த விற்பனையை செய்திருக்கிறது.

அதானி ஃபின்சேர்வ் நிறுவனமானது, அதனுடன் நெருங்கிய நிறுவனங்களாக அதானி கேபிடல் மற்றும் அதானி ஹௌசிங் நிறுவனங்களின் 90 சதவிகித பங்குகளை அமெரிக்காவின் பெயின் கேபிடல் நிறுவனத்துக்கு வெளிப்படுத்தப்படாத தொகைக்கு விற்பனை செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீதம் 10 சதவிகித பங்குகளை முதலீட்டு வங்கியாளரும், அதானி கேபிடல் தலைமை நிர்வாக அதிகாரியுமான கௌரவ் குப்தா வைத்திருக்கிறார்.

இந்த நிறுவனத்தை வாங்குவதற்கான போட்டி கடுமையாக இருந்த நிலையில், இதில் பெயின் கேபிடல் வெற்றி பெற்றுள்ளது.

அதானி கேபிடல் நிறுவனம், 2024ஆம் ஆண்டு தனது பங்குகளை ஐபிஓ செய்ய திட்டமிட்டிருந்தது. இரண்டு சதவிகிதப் நிறுவனப் பங்குகளை, பங்குச் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்து, அதன் மூலம் ரூ.1,500 கோடி அளவுக்கு திரட்ட திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்குள் ஹிண்டன்பர்க் ஆய்வு அமைப்பு, அதானி நிறுவனம் தொடர்பான பல உண்மைகளைத் தொகுத்து அறிக்கையை வெளியிட்டதால், அதானி நிறுவனம் பங்குச் சந்தையில் பெரும் எதிர்விளைவை எதிர்கொண்டு நிறுவனத்தையே விற்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.

அதானி கேபிடல் நிறுவனமானது, சிறு, குறு மற்றும் விவசாய தொழில்களுக்கான இயந்திரங்கள், கருவிகள் வாங்குவதற்கான கடனையும், அதானி ஹௌசிங், ஊரகப் பகுதிகளில் மலிவு விலையில் வீடுகள் கட்டுவதற்கான கடனையும் வழங்கி வந்தது.

அதானி கேபிடலை வாங்கும் பெயின் நிறுவனம், நிறுவன வளர்ச்சிக்காக ரூ.1,394 கோடிய ஒதுக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. காகிதங்களில், விற்பனையாகியிருக்கும் நிறுவனங்களின் மதிப்பு ரூ.2,000 கோடி என்று கூறப்படும் நிலையில், இந்த நிறுவனங்களின் பெயர்கள், நடைமுறை மாற்றங்கள் முடிவடையும் வரை இன்னும் கொஞ்சம் காலத்துக்கு இந்த பெயரிலேயே இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.