எதிர்காலத் தமிழினத்துக்காக இணைந்து போராடுவோம்! – ஹர்த்தாலுக்குத் தமிழரசுக் கட்சி ஆதரவு.

“தங்கள் தேசத்துக்கும், தமிழ் மக்களுக்கும் நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நாளை வெள்ளிக்கிழமையைத் துக்க நாளாக அறிவித்துள்ளனர். அதை ஆதரித்து ஹர்த்தாலாகக் கடைப்பிடிக்கின்றோம்.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் உள்ளதாவது:-

“இந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழர் பிரதேசங்களில் தமிழினப் படுகொலை நடைபெற்று 40 ஆண்டுகள் நிறைவு பெற்றும் தமிழினத்துக்கு நீதி கிடைக்கவில்லை என்பது உலகறிந்த வரலாறாகும்.

தமிழின அழிப்புக்கு ஆளாகிய தமிழின மக்களின் இந்தக்காலம் துக்க காலமாகும். தங்கள் தேசத்துக்கு தமிழ் மக்களுக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் – தமிழ் மக்கள் ஆறாத் துயருடன் கண்ணீருடன் நாளைய தினத்தைத் துக்கநாளாக அறிவித்துள்ளனர். அதை ஆதரித்து நாம் ஹர்த்தாலாகக் கடைப்பிடிக்கின்றோம்.

தமிழர் மனித குலம் புதைகுழிக்குள் புதைக்கப்பட்டு அழிக்கப்பட்டமை இலங்கையில் கறைபடிந்த வரலாறு. அந்த ஆத்மாக்களுக்கு ஆறுதலும், வருங்கால தமிழனத்துக்கு நீதியும் விடுதலையும் கிடைக்க வேண்டி அனைவரும் ஒன்றிணைந்து போராட்ட வேண்டியது கடப்பாடாகும். அதற்காக அனைவருக்கும் அழைப்ப விடுவிக்கின்றோம்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.