10 நாட்களில் கோடிகளை குவித்த தக்காளி விவசாயி…!

10 நாட்களில் ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க முடியுமா? முடியும் என்கிறார் ஒரு விவசாயி. ஆமாம் இந்நேரம் நீங்கள் ஊகித்திருப்பீர்கள் அவர் தக்காளி விவசாயி தான். தங்கம் வைத்திருப்பவர்களைவிட தற்போது தக்காளி வைத்திருப்பவர்களுக்கே அதிக மவுசு உள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கர்காமண்டலா கிராமத்தைச் சேர்ந்த முரளி என்ற விவசாயி, 22 ஏக்கரில் தக்காளி பயிரிட்டுள்ளார். நாடெங்கும் தக்காளி விளைச்சல் குறைந்த வேளையில், முரளியின் நிலத்தில் காய்த்து தள்ளியது தக்காளி இதனால், அவர் பக்கம் அதிஷ்ட காற்று அல்ல… அதிர்ஷ்ட புயலே அடித்துவிட்டது. தக்காளி விவசாயத்தின் மூலம் ஒன்றல்ல, இரண்டல்ல, 45 நாட்கள் 4 கோடி ரூபாயை வாரி குவித்திருக்கிறார் விவசாயி முரளி.

கடந்த ஆண்டு விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களையும் அடைத்த பின்னரும், வீட்டு அலமாரியில் 2 கோடி ரூபாய் பணம் மீதம் உள்ளது என வியப்பில் விழிகளை விரிய வைக்கிறார் முரளி.

இதுவரை 35 முறை அறுவடை செய்துவிட்டதாகவும், இன்னும் 20 முறை அறுவடை செய்யலாம் என கூறும் விவசாயி முரளியின் வீட்டில், கூரையை பிய்த்துக் கொண்டு பணம் கொட்டப்போவது உறுதி. விவசாயத்தால் கடன் ஏற்பட்டாலும், நம்பிக்கையுடன் தொழிலை தொடர்பவர்கள் எப்போது தோல்வியடைய மாட்டார்கள் என்றார் கோடீஸ்வர விவசாயி முரளி.

Leave A Reply

Your email address will not be published.