மலையக எழுச்சிப்பயணத்தில் இணைந்து வலுச்சேர்ப்போம் – சிறகுகள் அமையம் அழைப்பு.

மலையகம் 200 தொடர்பில் தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான நடைபயணம் நடைபெற்றுவருகின்றது, குறித்த நடைபயணத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலான ஊடக அறிக்கையினை சிறகுகள் அமையம் வெளியிட்டுள்ளது.

மலையக எழுச்சிப்பயணத்தில் இணைந்து வலுச்சேர்ப்போம்

இலங்கையின் பெருந்தோட்டங்களில் தொழில் புரிவதற்காக இந்தியாவில் இருந்து கூலிகளாக அழைத்து வரப்பட்டவர்களின் வலி நிறைந்த பாதையையும், அனுபவித்த சொல்லில் அடங்கா துயரங்களையும் நினைவு கூற வேண்டியது தமிழ் இளைஞர்களாகிய எமது கடமையாகும்.

ஆதி இலட்சுமி போன்று மூழ்காத பல கப்பல்களில் இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்கள்,மன்னாரில் தரையிறக்கப்பட்டு அங்கிருந்த, தாகம், பட்டினி, நோய், தன் குடும்பம் பற்றிய கவலை, கடன் சுமை, என்பவற்றுடன்

ஆபத்தான காடுகளும் மேடுகளும் தாண்டி, மாத்தளை வரை வெறும் கால்களுடன் நடை பயணமாகவே வந்தார்கள், நடை பயணத்தின்போது இழந்த உறவுகளும், உரிமைகளும் ஏராளம்!

அவர்கள் கடந்து சென்ற பாதை வழியே அவர்களுக்கான உரிமைகளையும் சமத்துவத்தையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு கிடைக்காவிடில், மலையக தமிழ் சமுதாயம் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படும் வரை அவர்களுக்கான கோரிக்கைகளை ஆதரிக்கும் வகையில் எமது குரலும் ஒலிக்க வேண்டும்.

28.07.2023 ( வெள்ளிக்கிழமை) மன்னாரிலிருந்து ஆரம்பிக்கும் மலையக எழுச்சிப்பயணம் , இரு நூற்றாண்டுகளாக மலையக மக்கள் ஆற்றிய பங்களிப்பிற்கான உங்கள் ஆதரவை வெளிக்காட்டவும் மலையக தமிழ் மக்களிற்கு ஆதரவாக உங்கள் கரங்களை கோர்க்கவும் சிறகுகள் அமையம் சார்பாக அனைவரையும் அழைக்கின்றோம். உங்கள் பங்களிப்பானது ஒரு சிறு தூரமாகவோ, ஒரு நாள் பயணமாகவோ அல்லது முழுப்பயணமாகவோ இருக்கலாம்.

இந்தப் பயணமானது தலைமன்னார் முதல் மாத்தளை வரை 200 வருடங்களுக்கு முன்னர் அழைத்துவரப்பட்ட மக்களின் வழித்தடங்களை தொடர்வதாகவும், வரலாற்றினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பெரும் பயணமாக அமையும்.

இந்த பயணம் மலையக தமிழ் மக்கள் சமத்துவ பிரஜைகளாக நடத்தப்படுவற்கும் அவர்களுக்கான உரிமைகளும் கோரிக்கைகளும் கிடைக்கவும் அவர்களின் வாழ்வியல் முன்னோக்கிய பாதையில் பயணிக்கவும் ஆணிவேராக அமையும் என நம்புகின்றோம்.இந் நடைபயணத்திலும் ,பயண வழி நெடுகிலும் ஏற்பாடு செய்யப்படும் பல நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளுமாறும் ஊக்குவிக்கின்றோம்.

Leave A Reply

Your email address will not be published.