13 குறித்த அடுத்தகட்ட நகர்வு என்ன? – அடுத்த வாரம் நாடாளுமன்றில் ரணில் விசேட அறிவிப்பு.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவும் இதற்கான அழுத்தத்தைப் பிரயோகித்து வருகின்றது.

இந்நிலையில் பொலிஸ் அதிகாரம் தவிர 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களைப் பகிர்வது சம்பந்தமாகவும், அதற்குத் தேவையான சட்ட திருத்தங்கள் பற்றியும் அரசு அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் கட்சிகளிடமும் ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே 13 ஆவது திருத்தச் சட்ட விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமான அரசின் நிலைப்பாட்டை அடுத்த வாரம் நாடாளுமன்றில் ஜனாதிபதி தெளிவுபடுத்தவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.