தென்னிலங்கை இனவாதிகளின் வாய்களுக்குப் பூட்டுப் போடுங்கள்! – இல்லையேல் பேச்சு நடத்த முடியாது.

“நாட்டில் மீண்டும் வன்முறையை – இன மோதலைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வரும் பௌத்த சிங்கள அரசியல்வாதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்படுத்த வேண்டும். அவர்களின் வாய்களுக்கு உடனடியாகப் பூட்டுப் போட வேண்டும்.”

இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

‘இலங்கை பௌத்த சிங்கள நாடு. இங்கே தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது. நான் வடக்கு, கிழக்குக்குச் செல்லவுள்ளேன். அங்கே விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கை வைக்க முயன்றால் அங்குள்ளவர்களின் தலைகளுடனேயே களனிக்குத் திரும்புவேன்’ – என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார். அவரின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மாவை சேனாதிராஜா இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தென்னிலங்கை அரசியல்வாதிகள் அதாவது பௌத்த சிங்கள அரசியல்வாதிகள் தொடர்ந்தும் இனவாதக் கருத்துக்களைக் கக்கி வருவதுடன் மீண்டும் வன்முறையைத் தூண்டும் – இன மோதலுக்கு வழிவகுக்கும் உரைகளையும் ஆற்றி வருகின்றனர். இதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

நாட்டின் தலைவராக இருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்படியான கருத்துக்களுக்கு இடமளிக்கக்கூடாது. பௌத்த சிங்கள அரசியல்வாதிகளின் இப்படியான கருத்துக்கள் நாட்டில் மீண்டும் வன்முறையைத் தூண்டும்; இன மோதலுக்கு வழிவகுக்கும்.

எனவே, தமிழ் மக்களுக்கு எதிராக வலிந்து வன்முறையை – மோதலை ஏற்படுத்த ஜனாதிபதி இடமளிக்கக்கூடாது.

வடக்கு – கிழக்குக்கு வந்து தமிழர்களின் தலைகளை வெட்டிச் செல்வேன் என்று அநாகரிகமற்ற வார்த்தைப் பிரயோகங்களை வெளியிட்ட மேர்வின் சில்வாவுக்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளை, தென்னிலங்கை இனவாதிகளை ஜனாதிபதி கட்டுப்படுத்த வேண்டும். அவர்களின் வாய்களுக்கு உடனடியாகப் பூட்டுப் போட வேண்டும்.

இப்படியான மோசமான செயற்பாடு தொடர்ந்தால் நாம் ஜனாதிபதியுடன் – அரசுடன் எப்படிப் பேச்சு நடத்துவது? இனவாதிகளை ஜனாதிபதி கட்டுப்படுத்தாவிட்டால் அரசுடன் நாம் பேச்சு நடத்த முடியாது.

இதை ஜனாதிபதி ரணிலிடம் நேரில் சொல்ல நாம் தயாராக இருக்கின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.