வறுமைக்குள் தள்ளப்படும் உலகம் : சுவிசிலிருந்து சண் தவராஜா

அறிவியல் கண்டுபிடிப்புகள் காரணமாக உலக மாந்தரின் வாழ்வில் பலவகையான மேம்பாடுகள் ஏற்பட்டிருந்தாலும் கூட, சமமற்ற பொருண்மியப் பங்கீட்டின் விளைவாக பெருமளவான மக்களின் வாழ்க்கைத் தரம் பொதுவில் குறைவடைந்து செல்வதையே அவதானிக்க முடிகின்றது. செல்வந்தர்கள் மென்மேலும் செல்வந்தர்களாக ஆகும் போக்கு ஒருபுறம் இருக்க எளிய மக்கள் தொடர்ந்தும் வறுமையை நோக்கிச் சரிவதையும் பார்க்க முடிகின்றது.

இயற்கையின் படைப்பான உலகம் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருந்தாலும் வளப் பங்கீடு, நிலையற்ற ஆட்சி, போர்கள், இயற்கைச் சீற்றம் எனப் பல காரணிகளால் மக்களின் வாழ்நிலை பாதிக்கப்பட்ட வண்ணமேயே உள்ளது. இந்நிலையில் முழு உலகிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் மேலும் 165 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

நடப்பு உலகில் கடந்த மூன்று ஆண்டுகள் மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. 2019இன் பிற்பகுதியில் சீனாவின் வூகான் நகரில் அறிமுகமாகி உலகம் முழுவதும் சுழன்று பல இலட்சம் மக்களின் உயிரைப் பறித்த கொரோனா என்ற கொள்ளை நோய் உலகப் பொருளாதாரத்தை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது. அந்தப் பாதிப்பில் இருந்து உலகின் பெரும்பாலான நாடுகள் குறிப்பாக வறிய நாடுகள் முற்றாகவே இன்னும் மீளவில்லை.

உலகின் வறுமை நிலைமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் வெளியிட்டுள்ள ‘செயற்பாடற்ற தன்மைக்கான மானுடத்தின் விலை: சமூகப் பாதுகாப்பு மற்றும் கடன் இறுப்பு, 2020-2023’ என்ற அறிக்கை கொரோனாக் கொள்ளை நோயால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வறுமையிலும் வறுமையான உலகின் 10 விழுக்காடு மக்கள் இன்னமும் அந்தப் பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீளவில்லை எனக் குறிப்பிடுகிறது. வறிய நாடுகளைப் பொறுத்தவரை அடிமட்டத்தில் உள்ள அரைப் பங்கு மக்கள் இன்னமும் கொரோனாவுக்கு முந்திய நிலைமைக்கு மீளவில்லை என்கிறது அந்த அறிக்கை.

ஆரோக்கியமான நீண்ட ஆயுள், கல்வியறிவு மற்றும் கௌரவமான வாழ்க்கைத் தரம் என்ற மூன்று அடிப்படை அம்சங்களை அளவீடாகக் கொண்டது மனித வாழ்க்கைச் சுட்டி. இந்த அளவீட்டில் கடந்த இரண்டு வருடங்களில் தொடர்ச்சியான வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளது. மனித குல வரலாற்றில் இது முன் எப்போதும் நிகழ்ந்ததில்லை என்கிறது அந்த அறிக்கை.

உலகில் 195 நாடுகள் உள்ளன. இதில் 110 நாடுகளில் வறுமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 6.1 பில்லியன் மக்கள் தொகையில் 1.1 பில்லியன் மக்கள் வறுமை நிலையில் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. இது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மொத்த மக்கள் தொகையின் 18 விழுக்காட்டுக்கும் அதிகம் ஆகும். இதில் ஆறில் ஒருவர் உப சகாரா ஆபிரிக்கப் பிராந்தியத்திலும் தென்னாசியப் பிராந்தியத்திலும் வாழ்கின்றனர். ஆபிரிக்கப் பிராந்தியத்தில் 534 மில்லியன் மக்களும் தென்னாசியாவில் 389 மில்லியன் மக்களும் இவ்வாறு வாழ்வதாக ஆய்வு கூறுகிறது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் வாழ்கின்றனர். 35 விழுக்காடு மக்கள் குறை வருமானம் உடைய நாடுகளில் வாழுகின்றனர். இந்த நாடுகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மக்கள் தொகையில் 10 வீதத்தினர் வாழுகின்றனர். இவர்களுள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளோர் 18 வயதுக்குக் குறைவான இளையோர்கள் என்கிறது ஆய்வு. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள 566 மில்லியன் இளையோர் மொத்தத் தொகையில் அரைப் பங்கினர் ஆவர். ஏனையேரில் 27.7 விழுக்காடு குழந்தைகளும் 13.4 விழுக்காடு முதியோரும் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி உள்ளனர்.

உலகின் நகர்ப்புறங்களிலேயே வறுமை அதிகம் உள்ளது. வறிய மக்கள் எனக் கணிக்கப்பட்டேரில் 84 விழுக்காட்டினர் நகர்ப்புறங்களிலேயே வசிக்கின்றனர்.

சிறுவர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் நிலவும் வறுமை என்பது உலகின் எதிர்காலம் தொடர்பிலான அச்சமூட்டும் கேள்விகளை எழுப்புகிறது. வறுமையிலும் போசாக்கின்மையிலும் வளரும் ஒரு தலைமுறையினால் ஒரு ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு எவ்வகையில் உதவ முடியும்?

இது தவிர உலகம் முழுவதிலும் கடன் சுமை முன்னில் எப்போதும் இல்லாதவாறு அதிகரித்து உள்ளது என்கிறது இந்த அறிக்கை. கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் உலகளாவிய கடன் தொகை 2000ஆம் ஆண்டின் பின்னான காலப்பகுதியில் ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது. 92 ட்ரில்லியன் அமெரிக்க டொலராக உள்ள இந்தக் கடன் சுமையின் 70 விழுக்காட்டை சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளன.

கடனை மீளச் செலுத்துதல், கடனுக்கான வட்டியை மீளச் செலுத்துதல் போன்ற காரணங்களால் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் பெரும்பாலான வறிய நாடுகள் உள்ளன. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் நிலையில் அத்தகைய நாடுகள் மீள முடியாத வறுமை நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

ஐ.நா. அபிவிருத்தித் திட்ட அறிக்கையின் படி 2022ஆம் ஆண்டில் உலகில் உள்ள 46 நாடுகள் தமது மொத்த வருமானத்தில் 10 விழுக்காட்டுக்கும் அதிகமாக கடன்களுக்கான வட்டியை வழங்குவதில் செலவிடுகின்றன. 25 நாடுகள் கடன்களை மீளச் செலுத்துவதற்காக தமது வருமானத்தில் 20 வீதத்துக்கும் அதிகமான தொகையைச் செலவிட வேண்டிய நிலையில் உள்ளன.
தற்போதைய நிலையில் தீவிர மாற்றம் எதுவும் ஏற்படக் கூடிய அறிகுறிகள் தென்படவில்லை. மென்மேலும் வறுமை நிலைக்கு மக்கள் செல்லக்கூடிய அபாயமே நீடிக்கின்றது.

“தனி ஒருவனுக்கு உணவில்லையேல், ஜெகத்தினை அழித்திடுவோம்” என்று முழங்கினான் மகாகவி பாரதி. இன்றைய உலகில் இது வெற்றுக் கோசமே அன்றி வேறில்லை.

உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி உலகில் அதிகம் வறுமை நிலவும் நாடுகளின் பட்டியல்

1. தென் சூடான் – 82.30 %
2. ஈக்குவற்ரோறியல் கினி – 76.80 %
3. மடகாஸ்கர் – 70.70 %
4. கினி-பிசு – 69.30 %
5. எரித்திரியா – 69.00 %
6. சா ரொம் மற்றும் பிரின்சிப் – 66.70 %
7. புருண்டி – 64.90 %
8. கொங்கோ ஜனநாயகக் குடியரசு – 63.90 %
9. மத்திய ஆபிரிக்கக் குடியரசு – 62.00 %
10. குவாதமாலா – 59.30 %

Leave A Reply

Your email address will not be published.