திருப்பதி பாதயாத்திரை பக்தர்களுக்கு எச்சரிக்கை !

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் மலைப்பாதையில் சிறுத்தை, கரடி, முள்ளம்பன்றி என வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பது ட்ரோன் கேமிராக்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.

திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து அலிப்பிரி நடைபாதை வழியாக திருமலைக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 12-ம் தேதி பெற்றோருடன் பாதயாத்திரையாக சென்ற ஆந்திராவை சேர்ந்த 6 வயது சிறுமியை சிறுத்தை கடித்து கொன்று விட்டது. அதைத் தொடர்ந்து பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை திருமலை தேவஸ்தான அதிகாரிகள் செய்தனர்.

திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக நடந்து செல்லும் பக்தர்கள் தங்கள் குழந்தைகளை மிகவும் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களை ஒன்று கூட செய்து, வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பாக அழைத்து செல்னகின்றனர். ஹை அலர்ட் பகுதியில் 10 மீட்டருக்கு ஒரு பாதுகாப்பு ஊழியர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். இப்போது இரவு 10 மணி வரை அலிப்பிரி நடைபாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

வனவிலங்குகள் சிறுவர், சிறுமிகளையே குறி வைத்து தாக்குகிறது. எனவே, 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு பிற்பகல் 2 மணிக்கு பிறகு மலை ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு உட்பட்டவர்கள் காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பாதயாத்திரை மலைப்பாதையில் செல்ல முடியும். 12 வயதுக்கு உட்பட்டவர்களுடன் பெற்றோர் வரும்போது 2 மணிக்குள் வரவேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி மலை பாதையில் மோட்டார் சைக்கிளில் பயணிக்க காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிப்பதற்காக மலைப்பாதை அருகே வனத்துறையினர் மூன்று கூண்டுகளை அமைத்திருந்தனர்.

கடந்த திங்கள் அன்று அதிகாலையில் ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கிக்கொண்டது. அந்த சிறுத்தையை பத்திரமாக மீட்டு மலையின் வேறு பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் விட்டுள்ளனர். சிறுது நேரத்தில் அதே பகுதியில் மீண்டும் ஒரு சிறுத்தை புலியை பார்த்த பக்தர்கள் சத்தம் போட்டு அதனை வனப்பகுதியில் விரட்டி அடித்துள்ளனர். மறுநாள் அதே பகுதியில் கரடிகள் நடமாட்டம் இருந்ததும் தெரியவந்தது.

சேஷாசலம் வனப்பகுதியில் தற்போது 300-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதைத் தொடர்ந்து மலைப்பாதையில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 500 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமிராக்களில் பதிவான காட்சிகள் பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

சிறுத்தை, கரடி, முள்ளம் பன்றி ஆகியவை பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் இடத்திற்கு அருகிலேயே செல்வது பதிவாகி உள்ளன. வனத்துறையினர் பொருத்தி இருக்கும் ட்ரோன் கேமிராக்களில் பதிவாகியுள்ள காட்சிகள் மூலம் இவை உறுதி செய்யப்பட்டுள்ளன.

திருப்பதி மலையில் முதலாவது பாதையில் இருக்கும் யானை வளைவு அருகே சிறுத்தை நடமாட்டம் அதிகஅளவில் இருப்பதும் ட்ரோன் கேமிராவில் பதிவாகியுள்ளது. அதேபோல் திருப்பதி மலையில் உள்ள ஸ்பெஷல் டைப் காட்டேஜ் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதும் கேமிரா காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளன. மேலும், பல்வேறு இடங்களில் முள்ளம்பன்றிகள், காட்டு பன்றிகள், புனுகு பூனைகள் போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதும் தெரியவந்துள்ளன. இரவிலும் தானியங்கி முறையில் படம்பிடிக்கும் ட்ரோன் கேமிராக்கள் மூலம் இவை உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பக்தர்களை அச்சுறுத்தும் சிறுத்தைகளை பிடிப்பதற்காக மேலும் ஆறு கூண்டுகளை வனத்துறையினர் வைத்துள்ளனர். திருப்பதி மலைப்பாதையில் பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வனதுறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.