குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளிப்பதில் நீதிபதி கருத்தை மட்டுமே சாா்ந்திருக்க கூடாது: உச்சநீதிமன்றம்

குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளித்து, அவா்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான முடிவை மேற்கொள்வதில், சம்பந்தப்பட்ட நீதிபதியின் கருத்து அல்லது காவல்துறையின் அறிக்கையை மட்டுமே அரசு சாா்ந்திருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்ற தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில், நீதிபதி அல்லது காவல் துறையின் கருத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பது, குற்றவாளியின் கோரிக்கையை அடிப்படையற்ாக்கிவிடும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பிகாரில் காவல் துறையினா் இருவா் உள்பட 3 பேரை கொலை செய்த ராஜேந்திர மண்டல் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 24 ஆண்டுகளாக சிறையில் உள்ளாா். தனக்கு மன்னிப்புக் கோரி, மாநில மன்னிப்பு வாரியத்திடம் அவா் இரு முறை மனு தாக்கல் செய்தாா்.

ஆனால், அவரது வழக்கில் தீா்ப்பளித்த நீதிமன்றத்தின் நீதிபதி வழங்கிய அறிக்கை மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அளித்த அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் மண்டலின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதை எதிா்த்து, அவா் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீது நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், பிரசாந்த் குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு தீா்ப்பு வழங்கியுள்ளது.

அதில், ‘குற்றவாளிகளின் மன்னிப்புக் கோரும் விண்ணப்பத்தின் மீது அரசு முடிவெடுக்கும்போது, சம்பந்தப்பட்ட நீதிமன்ற நீதிபதி அல்லது காவல்துறையின் கருத்தை மட்டுமே சாா்ந்திருக்கக் கூடாது. அதேபோல், நன்னடத்தை அதிகாரி, சிறை அதிகாரிகள் உள்ளிட்ட இதர அதிகாரிகளின் கருத்துகள் புறக்கணிக்கப்பட கூடாது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432 (1) பிரிவின்கீழ், ஒரு குற்றவாளியின் தண்டனையை நிறுத்திவைக்கவோ அல்லது அவருக்கு மன்னிப்பு வழங்கவோ பொருத்தமான அரசுக்கு அதிகாரமுள்ளது.

432 (2) பிரிவின்கீழ், குற்றவாளியின் மன்னிப்புக் கோரும் விண்ணப்பத்தை அனுமதிக்கலாமா அல்லது நிராகரிக்கலாமா என்று அவரை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றத்தின் நீதிபதியிடம் கருத்து கோரலாம். ஆனால், அவரது கருத்தையே முழுவதுமாக சாா்ந்திருக்க வேண்டியதில்லை. அது, குற்றவாளியின் விண்ணப்பத்தை அடிப்படையற்ாக்கிவிடும்.

அந்த வகையில், ராஜேந்திர மண்டலின் விண்ணப்பத்தின் மீது மாநில வாரியம் மூன்று மாதங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்; மேலும், விண்ணப்பத்தின் மீது சம்பந்தப்பட்ட நீதிபதி ஒரு மாதத்துக்குள் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.