சிங்கை தர்மன் வெற்றியின் எதிரொலி :அன்னாசிப் பழம், அன்னாசிப் பழ கேக் விற்பனை அதிகரிப்பு

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம் வெற்றிபெற்றதை அடுத்து, சிங்கப்பூரில் அன்னாசிப் பழம் மற்றும் அன்னாசிப் பழ கேக் விற்பனை கூடியுள்ளது.

வழக்கமாக, தங்கள் கடையில் அன்னாசிப் பழ கேக் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்றுதான் விற்கும் என்றார் இனிப்புக்கடை உரிமையாளரான செலின் இங்.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் தர்மன் வென்றதையடுத்து, மறுநாள் சனிக்கிழமை மட்டும் 30 அன்னாசிப் பழ கேக் கேட்டு கோரிக்கை வந்ததாக அவர் கூறினார்.

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையை அவர் அறிவித்திருந்தார். ஒரு கேக்கின் விலை $48.

“இத்தகைய சலுகையின்மூலம் திரு தர்மனின் வெற்றியைக் கொண்டாடுவது வேடிக்கையான வழிமுறையாக இருக்கும் என்று நான் எண்ணினேன். இத்தனை பணிப்புகள் (orders) வந்தது எனக்கே வியப்பளித்தது. இதனை நான் எதிர்பார்க்கவில்லை,” என்றார் ‘ரீ அண்ட் மம்மி’ என்ற பழவகை இனிப்புக்கடையை நடத்தும் இங்.

இச்சலுகை திங்கட்கிழமைவரை நீடிக்கும்.

தேர்தலில் தர்மன் 70.4 விழுக்காடு வாக்குகளுடன் வென்றதை அடுத்து, பிராட்டா முதல் சோஜு, கேக்வரை, அன்னாசிப் பழம் சார்ந்த சலுகைகளை தின்பண்டக் கடைகளும் பானக் கடைகளும் அறிவித்துள்ளன.

அத்துடன், அன்னாசிப் பழம் மற்றும் அதுசார்ந்த பொருள்களின் விற்பனையும் உயர்ந்துள்ளது.

தர்மனின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், இம்மாதம் 9ஆம் தேதிவரை அன்னாசிப் பழ பிராட்டா, அன்னாசிப் பழ ‘சீஸ்’ பிராட்டா ஆகியவற்றைப் பாதி விலையில் வழங்குகிறது அப்பர் தாம்சன் சாலையில் உள்ள ‘கேசுவரினா கறி’ உணவகம்.

பழக்கடைகளில் முந்திய மாதங்களைக் காட்டிலும் ஆகஸ்ட் மாதத்தில் அன்னாசி விற்பனை 10% முதல் 15% வரை கூடியது.

அதிபர் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில் அன்றாடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அன்னாசிப் பழங்களை விற்றோம் என்று சில பழக்கடைக்காரர்கள் கூறியதாக ‘ஷின் மின்’ சீன நாளிதழ் தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.