பிரியாணிக்கு எக்ஸ்ட்ராவாக தயிர் வெங்காயம் கேட்ட வாடிக்கையாளர் அடித்துக்கொலை..!

பிரியாணிக்கு கூடுதலாக தயிர் வெங்காய பாக்கெட்டை கேட்ட வாடிக்கையாளருக்கும், ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வாடிக்கையாளர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதாகும் முகம்மது லியாகத் என்பவர் ஐதராபாத் பஞ்சகுட்டா பகுதியில் உள்ள மெரிடியன் என்ற தனியார் உணவகத்திற்கு அவரது நண்பர்களுடன் பிரியாணி பார்சல் வாங்குவதற்கு வந்துள்ளார். அவர்கள் அனைவரும் மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது.

பிரியாணி பார்சல் வாங்கும்போது லியாகத்தும் அவரது நண்பர்களும் கூடுதலாக தயிர்-வெங்காயம் பாக்கெட்டுகளை கேட்டுள்ளனர். இதற்கு ஓட்டல் பணியாளர்கள் மறுப்பு தெரிவித்தபோது இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் அடித்து புரள ஆரம்பித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை விலக்கி விட முயற்சித்தார்கள். இருப்பினும் சண்டை தொடர்ந்ததால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக லியாகத், அவரது நண்பர்களும், ஓட்டல் மேனேஜர் மற்றும் 4 பணியாளர்களும் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் லியாகத் தனக்கு காயம் காரணமாக மூச்ச விட சிரமமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் பரிசோதித்ததில் வரும் வழியிலேயே லியாகத்தின் உயிர் பிரிந்தது தெரிய வந்தது. எக்ஸ்ட்ரா தயிர் கேட்டு ஏற்பட்ட தகராறில் வாடிக்கையாளர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் ஐதராபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.