சிங்கப்பூரின் 9-வது அதிபராக பதவியேற்றார் தர்மன் சண்முகரத்னம்.

சிங்கப்பூரில் கடந்த 1-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவழியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக அவர் இன்று பதவியேற்றார்.

சிங்கப்பூரின் புதிய அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் ஹலிமா யாகூப்-ஐ தொடர்ந்து அந்நாட்டின் ஒன்பதாவது அதிபராக தர்மன் பதவியேற்று இருக்கிறார். முன்னாள் அதிபர் ஹலிமா யாகூப்-இன் பதவிக்காலம் நேற்றுடன் (செப்டம்பர் 13) நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இன்று (செப்டம்பர் 14) தர்மன் சண்முகரத்னம் பதவியேற்றுள்ளார். சிங்கப்பூர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுரேஷ் மேனன் புதிய அதிபருக்கு பதவி பிரமானம் செய்து வைத்தார்.

2019 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் தர்மன் சண்முகரத்னம் மூத்த அமைச்சராக பதவி வகிக்து வந்துள்ளார். மே 2011 முதல் மே 2019 வரை தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரின் துணை பிரதமராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வம்சாவழியை சேர்ந்த எஸ்.ஆர். நாதன் என்று அறியப்பட்ட செல்லப்பன் ராமநாதன் மற்றும் செங்கரா வீட்டில் தேவன் நாயர் ஆகியோர் சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.