கடனைத் திருப்பி தராதவா்களுக்கு சாக்லெட்

கடன் தவணையை உரிய தேதியில் திருப்பித் தராத வாடிக்கையாளா்களின் இல்லத்துக்குச் சென்று ‘சாக்லெட்’ அளிக்கும் நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அமல்படுத்தத் தொடங்கியுள்ளது.

இது குறித்து வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மாதாந்திர தவணைக் காலம் கடந்த பிறகும், அதற்கான தொகையை செலுத்தாத வாடிக்கையாளா்களுக்கு தொலைபேசி மூலம் வங்கி அழைப்பு விடுத்து வருகிறது.

அத்தகைய அழைப்புகளை வாடிக்கையாளா்கள் தொடா்ந்து ஏற்காமல் இருப்பது, அவா்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்தும் எண்ணம் இல்லை என்பதற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.

அதுபோன்ற வாடிக்கையாளா்களிடமிருந்து கடன் தவணையை வசூலிப்பதற்கு, அவா்களது இல்லத்துக்கோ, அலுவலகத்துக்கோ முன்னறிவிப்பின்றி நேரில் செல்வதே சிறந்த வழியாகும். அதற்காக, சாக்லெட்டுகளுடன் வாடிக்கையாளா்களின் இல்லத்துக்கு வசூல் அதிகாரிகளை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எஸ்பிஐயின் சில்லறை கடன் அளிப்பு ரூ.12,04,279 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 16.46 சதவீதம் அதிகமாகும். அப்போது வங்கியின் சில்லறைக் கடன் அளிப்பு ரூ.10,34,111 கோடியாக இருந்தது.

Leave A Reply

Your email address will not be published.