இரத்தக்கறை இல்லாமல் இருந்திருந்தால் விசாரணைக்கு முகம் கொடுத்திருக்கலாம் – ராஜபக்சக்களைச் சாடுகின்றார் மரிக்கார்.

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ராஜபக்சக்களின் கரங்களில் இரத்தக்கறை இல்லாமல் இருந்திருந்தால் தைரியமாக விசாரணைகளுக்கு முகம் கொடுக்கலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் 2019.04.21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. குண்டுத் தாக்குதல் தொடர்பில் தகவல் கிடைத்திருந்தும் மிலேச்சத்தனமான தாக்குதலைத் தடுக்கப் பாதுகாப்புத் தரப்பினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பிரச்சினைக்குரியது.

குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சிறந்த அதிகாரிகளை கோட்டபய ராஜபக்ச பதவியேற்றவுடன் இடம்மாற்றம் செய்தார். ஒரு சிலரைப் பதவி நீக்கி நெருக்கடிக்குள்ளாக்கினார். இரத்தக்கறை இல்லாமல் இருந்திருந்தால் தைரியமாக விசாரணைகளுக்கு முகம் கொடுத்திருக்கலாம்.

குண்டுத் தாக்குதல் சம்பவத்தால் நல்லாட்சி அரசு பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. ஏப்ரல் 25 ஆம் திகதி ‘நான்தான் ஜனாதிபதி வேட்பாளர்’ எனக் கோட்டபய ராஜபக்ச அறிவித்தார். கோட்டபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தவுடன் உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டன.

குண்டுத் தாக்குதல் சம்பவத்தால் ஐக்கிய தேசியக் கட்சியை நாட்டு மக்கள் முழுமையாகப் புறக்கணித்தார்கள். ரணில் விக்கிரமசிங்க ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். பொருளாதாரப் பாதிப்புக்குப் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்கர்கள், முஸ்லிம் சமூகத்தினர் நியாயத்தைக் கோருகின்றார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களின் பாதுகாவலனாகச் செயற்படப் போகின்றாரா? அல்லது பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கப் போகின்றாரா? என்பதை எதிர்பார்த்துள்ளோம்.

குண்டுத் தாக்குதல் இடம்பெற்றபோது அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே நாட்டில் இல்லை என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றார்கள். யுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொழும்புக்கு வருகை தந்து தாக்குதல்களை நடத்தவில்லை. வடக்கில் இருந்த நிலையில்தான் அவர் தாக்குதலை நடத்தினார்.

நௌபர் மௌலவி ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிக் என குறிப்பிடப்படுவது உண்மையல்ல. அன்டன் பாலசிங்கத்தைப் போலவே நௌபர் மௌலவி செயற்பட்டார். அன்டன் பாலசிங்கம் பிரபாகரன் அல்ல. ஆகவே நௌபர் மௌலவி பிரதான சூத்திரதாரியல்ல என்பதை உறுதியாகக் குறிப்பிட முடியும்.

குண்டுத் தாக்குதல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விசாரணை அறிக்கைகளில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. உண்மை தொடர்ந்து மூடி மறைக்கப்படுகின்றது. ஆகவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச விசாரணையே இறுதித் தீர்வாக அமையும்>’ – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.