பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம்…!

காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கரும்பு விவசாயிகள், கன்னட அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

பாஜக, மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், தமிழ்நாட்டிலிருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டதால் பெங்களூரு செல்லும் பயணிகள் அவதியடைந்தனர்.

சேலம் கோட்டத்தில் 350 பேருந்துகளும், விழுப்புரம் கோட்டத்தில் 80 பேருந்துகள் என 430 பேருந்துகள் செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

பெங்களூரு சென்ற தமிழர்கள் மீண்டும் ஓசூர் திரும்பும் வகையில் தமிழக எல்லையான ஜூஜூவாடியிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனிடையே, கர்நாடகா வழியாக லாரிகளை இயக்க வேண்டாம் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.