முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்: இலங்கைக்குத் தலைகுனிவு! – சம்பந்தன் கடும் சீற்றம்.

“அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகியமை தொடர்பிலும், உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறியமை குறித்தும் இந்த நாடும் அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நீதிபதி ரி.சரவணராஜா மீளவும் பதவியை ஏற்பதற்கும், அவர் சுதந்திரமாகக் கடமையாற்றுவதற்கும் ஏதுவான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் விரைந்து எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“குருந்தூர்மலை சம்பந்தமான முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தல், அந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தல் மற்றும் அழுத்தங்களைப் பிரயோகித்தல் ஆகிய விடயங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவையாகும்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தன் மீது பயன்படுத்தப்பட்ட அழுத்தங்கள் காரணமாகப் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். அதேவேளை, உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டும் அவர் வெளியேறியுள்ளார். இதனூடாக அவர் சந்தித்த நெருக்கடிகள் எவ்வாறு இருந்தன என்பதை விளங்கக்கூடியதாக இருக்கின்றது.

இந்த விவகாரம் தொடர்பில் நாடும் அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

நீதிமன்றமும் நீதிபதிகளும் சுதந்திரமாகச் செயற்பட இடமளிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் மக்கள் நீதிமன்றம் சென்று நீதியைப் பெற முடியும்.

நீதிமன்றத்தினதும் நீதிபதிகளினதும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தினால் அது பாரதூரமான குற்றமாகும்.

இந்த விடயம் சம்பந்தமாக உள்நாட்டு விசாரணை மாத்திரமல்ல வெளிநாட்டு விசாரணையும் நடக்க வேண்டியது அவசியம்.

இலங்கையின் நீதித்துறை சுதந்திரத்தைப் பறிக்கும் இந்தப் பாரதூரமான செயல்களை வெளிநாடுகளும், சர்வதேச அமைப்புக்களும் மிகவும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். அத்துடன் நீதிபதி ரி.சரவணராஜா மீளவும் பதவியை ஏற்பதற்கும், அவர் சுதந்திரமாகக் கடமையாற்றுவதற்கும் ஏதுவான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் விரைந்து எடுக்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.