மசூதி அருகே குண்டு வெடிப்பு; தற்கொலைத் தாக்குதலில் 52 பேர் பலி!

பாகிஸ்தான் நாட்டில் முஹம்மது நபி (ஸல்) அவங பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்காக மசூதி அருகே மக்கள் கூடியிருந்த சமயத்தில், திடீரென குண்டு வெடித்து, 52 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானில், மசூதி அருகே இன்று பொதுமக்கள் கூடியிருந்த சமயத்தில், திடீரென குண்டு வெடிப்பு ஏற்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவம், பலுசிஸ்தான் மாகாணத்தின் மஸ்துங் மாவட்டத்திலுள்ள மதீனா மசூதிக்கு அருகே நடந்திருக்கிறது.

முன்னதாக, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளான மிலாது நபி தினத்தையொட்டி, பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன் காரணமாக, பேரணியில் கலந்துகொள்ளும் விதமாக, மசூதி அருகே பொதுமக்கள் இன்று ஒன்றுகூடினர்.

இத்தகைய சூழலில்தான் திடீரென இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதில், சுமார் 52 பேர் பலியாகினர். குறிப்பாக, பேரணியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மஸ்துங் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் நவாஸ் காஷ்கோரி இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

130-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக, ஷாஹீத் நவாப் கவுஸ் நினைவு மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரியான டாக்டர் சயீத் மிர்வானி தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய நகர ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) முஹம்மது ஜாவேத் லெஹ்ரி,

“இது தற்கொலைப்படையின் தாக்குதல். மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் காருக்கு அருகே தற்கொலைப் படை நபர் ஒருவர் தன்னைத் தானே வெடிக்கச் செய்து இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

மேலும், பாகிஸ்தானின் இடைக்கால உள்துறை அமைச்சர் சர்ப்ரஸ் அஹமது புக்டி, இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அதோடு, பலுசிஸ்தான் மாகாணத்தின் இடைக்கால தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜான் அச்சக்சாய், சம்பவ இடத்துக்கு மீட்புக்குழுக்கள் அனுப்பப்பட்டிருப்பதாகவும், மருத்துவமனைகளில் அவசரநிலை விதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.