இது ஒரு நீண்ட, சிரமமான போர்: இஸ்‌ரேலியப் பிரதமர் : மோதல் தொடர்கிறது

நீண்டகால, சிரமமான போரை இஸ்‌ரேல் எதிர்நோக்குகிறது என்று இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெட்டன்யாஹு எச்சரித்துள்ளார். இஸ்‌ரேலிய மண்ணில் இஸ்‌ரேலிய ராணுவத்திற்கும் பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் தொடர்கிறது.

இவ்வேளையில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தாக்குதலில் 500க்கும் அதிகமான இஸ்‌ரேலியர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

அதேவேளையில் இஸ்‌ரேலிய விமானப்படைகள் காஸா பகுதியில் நடத்திய தாக்குதலில் 313 பேர் கொல்லப்பட்டதாகவும், 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீனத் தரப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் காஸாவுக்கு அருகே இஸ்‌ரேலிய மண்ணில் இஸ்‌ரேலிய ராணுவத்திற்கும் பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் தொடர்கிறது.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் இஸ்ரேலின் பல்வேறு நகரங்கள்மீது சனிக்கிழமை தாக்குதல்களை நடத்தினர். தாக்குதல்காரர்கள் பலரைப் பிணையாக பிடித்துக் கொண்டு தப்பியோடினர்.

“இந்தத் துயரமான நாளுக்கு நாங்கள் பதிலடி தருவோம்,” என்று பிரதமர் நெட்டன்யாஹு கூறினார்.

இஸ்‌ரேல் நடத்திய பதிலடி, இஸ்ரேல் இதுவரை மேற்கொண்ட தாக்குதல்களில் ஆகக் கடுமையானதாகக் கருதப்படுகிறது.

“ஹமாஸ் மோசமான, கொடூரமான போரைத் தொடங்கியுள்ளது. இந்தப் போரில் நாங்கள் வெல்வோம். ஆனால் இதற்கு நாங்கள் கொடுத்திருக்கும் விலை மிகவும் அதிகம்,” என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

காஸாவில் தொடங்கிய தாக்குதல் மேற்குக் கரை, ஜெருசலம் ஆகிய பகுதிகளுக்கும் பரவும் என்று ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கூறியிருந்தார்.

“பாலஸ்தீன மக்கள் 75 ஆண்டுகளாக அகதிகள் முகாம்களில் வாழ்ந்துகொண்டிருப்பதாக எத்தனையோ முறை நாங்கள் எச்சரித்துள்ளோம். ஆனால் எங்கள் மக்களின் உரிமைகளைக் கருத்தில்கொள்ள நீங்கள் மறுக்கிறீர்கள்,” என்றார் அவர்.

காஸாவுக்கு அருகே இருக்கும் ஸ்டெரோட் எனும் தெற்கு இஸ்ரேலிய நகரில் அந்நாட்டுப் பொதுமக்கள் பலரின் உடல்கள் சாலைகளில் கிடந்தன. ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணின் உடல்கள் வாகனம் ஒன்றின் முன்னிருக்கைகளில் காணப்பட்டன.

தாக்குதல்களால் பயந்துபோன இஸ்ரேலியர்கள் பாதுகாப்பு அறைகளில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் தங்களின் அவல நிலையைக் கைப்பேசிகளின்வழி தொலைக்காட்சியில் தெரியப்படுத்தினர்.

அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய நாடுகள் இஸ்ரேல்மீதான பாலஸ்தீனத் தாக்குதல்களுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தன. இஸ்ரேலுக்குத் தாங்கள் ஆதரவளிப்பதாகவும் அவை கூறின.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று இஸ்ரேலியப் படைகள், ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த துப்பாக்கி ஏந்தியோருடன் மோதின.

தெற்கு இஸ்ரேலிலும் காஸா பகுதியிலும் 400க்கும் அதிகமான பாலஸ்தீன பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பிபிசி போன்ற ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் பிடிபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமையன்று தெற்கு லெபனான்மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதாகவும் சில தகவல்கள் தெரிவித்துள்ளன. சர்ச்சைக்குரிய ஷெபா பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேலியப் படைகள் இருந்த மூன்று இடங்களைக் குறிவைத்து செயல்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

கடைசி நிலவரப்படி உயிர்ச் சேதம் இருந்ததாகத் தகவல் இல்லை.

Leave A Reply

Your email address will not be published.