முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை நிறுத்தும் வர்த்தமானி இன்னும் வெளிவராமல் இருப்பது ஏன்?

– அரசிடம் அஸாத் ஸாலி கேள்வி

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பது தொடர்பில் அரசு மீள்பரிசீலனை செய்து, அடக்கம் செய்வது குறித்த நடைமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த நகீப் மௌலானா கூறி பல மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் ஜனாஸாக்களை எரிப்பது தொடர்பில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்,

“வக்கிரப்போக்குடனேயே அரசின் செயற்பாடுகள் இருக்கின்றன. கொரோனா வைரஸ் என உறுதிப்படுத்தப்படாதவர்களின் மரணங்களும் கொரோனா எனக் கூறி எரியூட்டப்படுகின்றன.

விமான நிலையத்திலிருந்து வெளியேறும்போது கொரோனா பரிசோதனையின் அறிகுறிகள் இல்லை என்று சான்றிதழ் வழங்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தல் காலத்தில் திடீரென நோய் இருக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டு வலுக்கட்டாயமாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய புற்றுநோயாளியான முஸ்லிம் பெண்மணி ஒருவர், தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் இறந்துள்ளார்.

தனது கணவனுடன் செல்ல வேண்டும் என்று அவர் கூறியபோதும், அதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், பயமும் ஏக்கமும் ஏற்பட்டு அவர் இறந்தார் என்று உறவினர்கள் கூறினர்.

இப்போது அவரது மரணம் தொடர்பில் கிடைத்த மருத்துவச் சான்றிதழில் ‘மாரடைப்பு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி, வெளிநாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லிம் நபர் ஒருவரும் இவ்வாறு வேறு காரணங்களால் இறந்தபோதும், கொரோனா எனக் கூறி அவரின் ஜனாஸா எரிக்கப்பட்டுள்ளது.

மாடறுப்பு விவகாரத்தை முஸ்லிம்கள் பெரிதுபடுத்தாமல் இருந்தபோதும், பெரும்பான்மை சமூகம் அதற்கு எதிராகக் குரல் கொடுத்ததனால், அரசு அந்த எதிர்ப்புக்களை சமாளிப்பதற்காகவே அதனைச் சிறிதுகாலம் தள்ளிப்போட்டுள்ளது.

எனினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் கடும்போக்குவாதிகளையும் திருப்திப்படுத்துவதற்காக இந்த அரசு முஸ்லிம்களுக்கு எதிராக எதை வேண்டுமானாலும் செய்யும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.