கொடிய விஷத்தை வைத்து கணவரின் குடும்பத்தையே கொன்ற பெண்..!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே கட்சிரோலியின் மஹாகாவ் கிராமத்தில் சங்கர் என்பவரின் குடும்பத்தில் ஐந்து பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் சங்கர் மற்றும் அவரது மனைவி விஜயா ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து சங்கரின் மகன், மகள் மற்றும் உறவினர் என அடுத்தடுத்து மூன்று பேர் உயிரிழந்தனர். அதாவது செப்டம்பர் மாதம் 20ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 10-ம் தேதி என 20 நாட்களுக்குள் ஐந்து பேரும் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து ஐந்து பேர் இறந்ததால் கட்சிரோலியின் மஹாகாவ் கிராமத்தில் மக்கள் பெரும் பீதி அடைந்தனர். பில்லி, சூனியத்தால் இந்த மரணங்கள் ஏற்படுவதாக வதந்தி பரவியது. இதையடுத்து இந்த மரணங்கள் தொடர்பாக அப்பகுதிபோலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

அந்த குடும்பத்தில் மீதி இருந்தது விவசாய விஞ்ஞானியான சங்கரின் மருமகள் சங்கமித்ரா மட்டுமே. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மர்மங்களுக்கு விடை கிடைக்கவில்லை. இந்த நிலையில் தீடீரென போலீசார் சங்கமித்ராவின் செல்போனை ஆய்வு செய்துள்ளனர். அப்போது சங்கமித்ரா அவரது செல்போனில் விஷம் தொடர்பான தகவல்களை தேடியிருந்தது தெரியவந்துள்ளது. உஷாரான போலீசார் சங்கமித்ராவிடம் கிடுக்குபிடி விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது தான் உண்மை தெரியவந்துள்ளது.
சங்கமித்ராவின் தந்தை அண்மையில் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்.

தனது தந்தையின் சாவிற்கு தனது கணவர், மாமியார்,மாமனார் தான் காரணம் என்பதால் அவர்களை பழி வாங்க சங்கமித்ரா முடிவு செய்துள்ளார். அதற்காக மாட்டிக் கொள்ளாமல் கொலை செய்வதற்காக விஷத்தை தேடி இருக்கிறார். அப்போதுதான் ஒரு கொடிய விஷம் குறித்து அவருக்கு தெரியவந்துள்ளது. விஷத்திற்கே விஷம் என்று சொல்வார்கள், அவவ்ளவு கொடிய விஷம். அதை உணவில் கலந்து கொடுத்தால் மனம், ருசி என எதுவுமே மாறாது. உணவில் விஷம் கலந்திருப்பதை கண்டுபிடிக்கவே முடியாது. மெல்ல மெல்ல கலந்து சாப்பிட்டால் உயிரையே கண்டிப்பாக பறித்துவிடும். ஆனால் எப்படி இறந்தார்கள் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து தனது தோழி ரோஜா என்பவருடன் கூட்டு சேர்ந்து தெலங்கானா சென்று அந்த கொடிய விஷத்தை வாங்கி உள்ளார். அதனை சங்கமித்ரா ஒவ்வொருவருக்கும் உணவில் கலந்து கொடுத்துள்ளார். சங்கமித்ரா எதிர்பார்த்தபடியே தனது கணவர் மற்றும் மாமனார் சங்கர் மற்றும் மாமியார் அடுத்தடுத்து இறந்தனர். அதன்பின்னர் உறவினர்களும் இறந்தனர், கிட்டத்தட்ட ஐந்து பேர் இறந்து போனார்கள்.

தனது தந்தையின் சாவுக்கு காரணமான கணவரின் குடும்பத்தை பழிவாங்க இப்படி செய்ததாகவும், வலி மிகுந்த மரணத்தை கணவர் குடும்பம் அடைய வேண்டும் என இப்படி செய்ததாக சங்கமித்ரா கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சங்கமித்ராவையும் அவருக்கு உதவிய ரோஜாவையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.