அடுத்தடுத்து பாலியல் புகார்.. அதிரும் குமரி

தமிழ்நாட்டில் ஆயுர்வேத மருத்துவத்துக்கென துவங்கப்பட்ட முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைதான் கோட்டார் பகுதியில் இயங்கி வரும் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இங்கு, ஏராளமான உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி நாள்தோறும் நூற்றுக்கணக்கான புறநோயாளிகளும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து, ஆயுர்வேத மருந்துகளை பெற்றுச் செல்கின்றனர்.

இந்த நிலையில், மருத்துவர் ஆண்டனி சுரேஷ் சிங் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் மருத்துவர் ஒருவர் சார்பில் கோட்டார் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில், பேராசிரியர் பாலியல் தொல்லை அளித்ததால் முதுநிலை பயிற்சி மாணவி, விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தமிழ்நாட்டையே புரட்டி போட்டுள்ள நிலையில், கோட்டார் அருகே அரசு பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.உடனே, காவலர்கள் விசாரணையை துவங்கினர்.

பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் மருத்துவக் கல்லூரிக்கு சென்ற காவலதிகாரிகள், மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என வேறு யாருக்கும் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ளதா என இரண்டு பயிற்சி மருத்துவர்களை தனி அறையில் வைத்து சுமார் 1 மணி நேரமாக விசாரித்தனர். புகாருக்குள்ளான நிலைய மருத்துவர் ஆண்டனி சுரேஷ் சிங், இரண்டு நாட்களாக விடுமுறையில் இருந்ததால், அவரது வீட்டிற்கே சென்ற காவலர்கள், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றும் விசாரித்தினர்.

அப்போதுதான், ஆண்டனி சுரேஷ் சிங் தொடர்பான மேலும் பல தகவல்கள் வெளியாகி காவலர்களையே தலை சுற்ற வைத்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த ஊரான ஆசாரிப்பள்ளம் பகுதியில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், கிராம மக்களால் அடித்து விரட்டப்பட்டிருக்கிறார் ஆண்டனி சுரேஷ் சிங். அதன் பிறகே ஆயுர்வேத மருத்துவம் பயின்று பின்னர் சீவலப்பேரி பஞ்சாயத்து ஒன்றியத்தின் மருத்துவராகவும் பணியாற்றி உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் மற்றும் ஆசாரிப்பள்ளம் ஆகிய மருத்துவமனைகளில் பணியாற்றிய சுரேஷ் சிங், 4 மாதங்களுக்கு முன்பு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை மருந்தகத்தில் பணி புரிந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இவர் மீதான புகாரை மறைத்த சக மருத்துவர்கள், மருத்துவர் சுரேஷ் சிங்கை காப்பாற்றியதுடன், புகாரளித்த பெண்ணையே அந்த மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்துள்ளனர்.

இதன் பிறகே, அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாறியுள்ளார் ஆண்டனி சுரேஷ் சிங்.ஆனால், அங்கும் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது கோட்டார் காவல் நிலைய காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ள ஆண்டனி சுரேஷ் சிங் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மருத்துவருக்கு நவம்பர் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்தடுத்து மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் மக்களிடையே அதிர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.