கிழக்கில் சட்ட ரீதியாகவே காணி விடுவிப்பு; இடையூறு ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை – ஆளுநர் செந்தில் எச்சரிக்கை.

கிழக்கு மாகாணத்தின் காணி விடுப்பு பணிகள் மகாவலி அமைச்சின் கீழ் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், அந்தப் பணிகள் ஒருபோதும் இன, மத அடிப்படையில் முன்னெடுக்கப்படாது என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உறுதியளித்தார்.

அந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்த முற்படும் மூன்றாம் தரப்பினருக்கு எதிராகப் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (27) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“கிழக்கு மாகாணத்தின் மயிலத்தமடு – திவுலபத்தனபகுதியில் யுத்தத்திற்கு முன்பாக வசித்த மக்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் அங்கு படிப்படியாக குடியமர ஆரம்பித்துள்ளனர். அம்மக்கள் விவசாயிகள் மற்றும் கால்நடை விவசாயிகள் என இரு குழுக்களாக இருப்பதால் அப்பகுதி மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.

மயிலத்தமடு பகுதியில் மீளக் குடியமரும்போது, பொலன்னறுவை மற்றும் அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பலரை மேலதிகமாக அழைத்து வந்துள்ளமையினால், அவர்களின் விவசாயச் செயற்பாடுகளைப் பாதுகாக்கும் வகையில், வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருப்போருக்கு தற்காலிக ஊக்குவிப்பு தொகையொன்றை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், அம்பாறை மற்றும் பொலன்னறுவை பகுதிகளிலிருந்து வந்தவர்களை அம்மாவட்டங்களிலேயே விரைவில் குடிமயர்த்துவது குறித்தும் ஆராயப்படுகிறது.

அதேபோல், மயிலத்தமடு – திவுலபத்தன பகுதியில் யுத்தத்திற்கு முன்னர் வசித்த மக்கள் அவர்களுக்குச் சொந்தமான காணிகளில் மீள் குடியமர்த்தப்பட வேண்டியது கட்டாயமானது என ஜனாதிபதி வலியுறுத்தியிருக்கும் நிலையில், மகாவலி அமைச்சு அப்பணியை சட்டரீதியாக முன்னெடுத்து வருகின்றது.

அதேநேரம் அனுமதியின்றி அரச காணிகளில் வசிப்பவர்களின் காணிகளைக் கையகப்படுத்தி, அவர்களை அக்காணிகளில் சட்டரீதியாக குடியமர்த்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும், அரச காணிகளில் அனுமதியின்றி வசிப்பவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து தமது இருப்பை சட்டரீதியாக்கிக்கொள்ள முடியும் எனவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம் மகாலவி வேலைத்திட்டத்திற்காக கிழக்கின் கோரளைப்பற்று பகுதியிலிருந்து தமிழர்களும், நாவலடி பகுதியிலிருந்து முஸ்லிம்களும் அகற்றப்பட்டிருந்த நிலையில் இந்த பணிகள் இன, மத அடிப்படையில் அல்லாது சட்டரீதியாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கிராம சேவகர்களிடத்திலிருக்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே காணிகளைப் பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக சிங்கள மக்களின் குடியிருப்புகள் மற்றும் அங்கிருந்து அகற்றப்படுகின்றது என்ற வகையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கைகளும் பொலிசாரினால் நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ளன.

அதனால் மேற்படி முன்னெடுப்புகளின் போது சகல இனத்தவர்களுக்கும் இலங்கையர் என்ற வகையிலேயே சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதோடு, அதுகுறித்து அநாவசியமாக கருத்துக்களை வெளிப்படுத்த மூன்றாம் தரப்பினர் முற்படக் கூடாது.” – என்றும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.