சம்பந்தன் பதவி விலகல் குறித்து உண்மையைக் கூறிய சுமந்திரன் – யாழில் ரவிகரன் தெரிவிப்பு.

“நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து சம்பந்தன் ஐயா விலக வேண்டும் என்று சுமந்திரன் எம்.பி. சொல்லியுள்ளதை சம்பந்தன் ஐயா கூட தவறாக எடுக்கமாட்டார்.”

இவ்வாறு முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை ரவிகரன் நேற்று (27 நடத்தியிருந்தார். இதன்போது சம்பந்தனின் எம்.பி. பதவி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சம்பந்தன் ஐயாவின் அரசியல் அனுபவம் தொடர்பில் அனைவருக்குமே தெரியும். அவர் ஒரு தெளிவான அரசியல்வாதி என்பதுடன் நீண்ட அனுபவசாலி என்றே பலரும் கூறுவார்கள்.

அவரது தெளிவான பார்வையும் அரசியல் அனுபவமும் எப்போதும் தேவையானது. ஆனால், வயது மூப்பின் காரணமாக அவரால் முன்னரைப் போன்று செயற்பட முடியவில்லை.

குறிப்பாக அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெறுகின்றபோது அந்த மக்கள் தங்கள் பிரதிநிதி தொடர்பில் தேடுகின்றதுடன் தங்களுக்காக ஒருவர் களத்தில் இருக்க வேண்டும் என்று கோரியிருக்கின்ற நிலைமை உள்ளது.

இவ்வாறான நிலைமையில்தான் எமது கட்சியைச் சேர்ந்த சுமந்திரன் எம்.பி. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியொன்றை வழங்கியிருந்தார்.

அதன்போது சம்பந்தன் ஐயா தொடர்பில் அவரிடத்தே கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் எம்.பி. பதவியிலிருந்து சம்பந்தன் விலக வேண்டுமென்ற விடயத்தைச் சொல்லியிருந்தார். அதாவது சம்பந்தன் ஐயா அனுபவசாலி என்றாலும் அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற மக்களது எதிர்பார்ப்பை சுமந்திரன் பதிலாகக் கூறியுள்ளார்.

சுமந்திரன் சொன்னது உண்மையானதுதான். ஆனால், சுமந்திரன் நினைத்திருந்தால் பொய் சொல்லியிருக்கலாம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் இதனைக் கூறினார்.

அதேநேரத்தில் சுமந்திரன் எம்.பி. இந்த உண்மையைச் சொல்லாமல் விட்டிருந்தால் மீளவும் சுமந்திரன் எம்.பியைப் போட்டுத் தாக்கியிருப்பீர்கள்.

ஆகவே, சுமந்திரனின் உண்மையான இந்தக் கருத்து தொடர்பில் கட்சியின் அடுத்து வரும் கூட்டங்களில் கூட ஆராயப்படலாம். ஆனால், சுமந்திரனின் இந்தக் கருத்தைச் சம்பந்தன் ஐயா கூட தவறாக எடுக்க மாட்டார் என்றே நினைக்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.