கேரள குண்டுவெடிப்பு: தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்!

எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத கூட்டரங்கில் ஏற்பட்ட குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அதன் அண்மை மாநிலமான தமிழக எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் சோதனை சாவடிகள் மூலம் வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்கவும் விடுதிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை அதிகப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி, எருமாடு, கக்கனல்லா உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வெடிகுண்டு சம்பவ இடத்தில் இருந்து அதற்கு சற்று முன்னதாக நீல நிற சொகுசு கார் சந்தேகப்படும்படி கிளம்பி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்று நாள்களாக நடந்து வந்த களமசேரி மத கூட்டரங்கில் இன்று, அடுத்தடுத்து குண்டுவெடித்தது. 2000-க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஒருவர் பலியானதாகவும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் எனவும் மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் எர்ணாகுளம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.