`மிஸ் யூ பெர்சி அங்கிள்!’ – கலங்கும் கிரிக்கெட் வீரர்கள்

1982 இல் இலங்கை அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய போதிருந்தே மைதானங்களுக்கு நேரில் சென்று இலங்கை கொடியோடு அணிக்கு உற்சாகமாக ஆதரவு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

தாங்கள் செல்லமாக ‘பெர்சி அங்கிள்’ என அழைக்கும் இலங்கை கிரிக்கெட்டின் தீவிர ரசிகரான பெர்சி அபைசேகரா 87 வயதில் உடல்நலக்குறைவால் இறந்த செய்தி இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள், வீரர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கிரிக்கெட்டை மூச்சு போல சுவாசிக்கும் ரசிகர்கள் இருப்பதால்தான் பல ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகும் இந்த ஆட்டம் உயிரோட்டமாக இருந்து கொண்டிருக்கிறது. இதிலும் குறிப்பாக கவனிக்க வேண்டியது குறிப்பிட்ட அணிகளின் ரசிகர்களாக குறிப்பிட்ட வீரர்களின் ரசிகர்களாக அவர்களோடு ரத்தமும் சதையுமாக இருப்பவர்களையே. இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் சச்சினுக்கும் தோனிக்கும் மற்றும் சில ஐ.பி.எல் அணிகளுக்கும் அப்படியான ரசிகர்கள் இருப்பதை பார்த்திருப்போம். உதாரணத்திற்கு சச்சினின் தீவிர ரசிகரான சுதீரைச் சொல்லலாம். உடம்பு முழுக்க தேசியக்கொடியையும் சச்சின் என்கிற பெயரையும் வரைந்து கொண்டு இந்தியா ஆடும் அத்தனைப் போட்டிகளிலும் தேசியக்கொடியை காற்றில் அலையென வீசி ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பார். இவரைப் போன்றவர்தான் பெர்சி அங்கிளும்.

Percy Uncle

Percy Uncle

இலங்கை அணிக்காகவும் இலங்கை வீரர்களுக்காகவும் அரை நூற்றாண்டுக்கு மேல் அவர்கள் ஆடும் போட்டிகளுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வந்தவர். 1982 இல் இலங்கை அணி தங்களின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய போதிருந்தே மைதானங்களுக்கு நேரில் சென்று இலங்கை கொடியோடு அணிக்கு உற்சாகமாக ஆதரவு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இலங்கை கிரிக்கெட்டின் ஆரம்ப காலத்திலிருந்தே அவர்களுக்கு தீவிர ஆதரவை அளித்து வருவதால் பெர்சி அங்கிள் இலங்கையின் அத்தனை கிரிக்கெட் வீரர்களுக்குமே பிடித்தமான நபராக மாறிவிட்டார். அதனால்தான் அவரின் மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அவ்வளவு உருக்கமாக இரங்கல் செய்திகளை பதிவிட்டு வருகின்றனர்.

‘என்னுடைய கரியர் முழுவதும் அவர் எங்களுக்காக முன் நின்று ஆதரவு தெரிவித்திருக்கிறார். வெற்றியோ தோல்வியோ அவர் எப்போதும் எங்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்!’ என சோகமாகப் பதிவிட்டிருக்கிறார் மஹேலா ஜெயவர்த்தனே.

‘என்னுடைய முதல் போட்டியிலிருந்து கடைசிப் போட்டி வரைக்கும் நிரந்தரமாக இருந்தவர் பெர்சி அங்கிள்தான். இலங்கை கிரிக்கெட்டுக்கான அவரின் பங்களிப்பு எந்த ஒரு வீரரின் பங்களிப்ப்பை விடவும் குறைந்ததில்லை. அவரின் உற்சாக பாடல்களை ஆர்ப்பரிப்பை அவரின் கிரிக்கெட் அறிவை என அத்தனையையும் இனி தவறவிடுவோம்!’ என சங்ககரா நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

முந்தைய தலைமுறை வீரர்கள் மட்டுமில்லை. இப்போது ஆடி வரும் இளம் வீரர்களுமே பெர்சி அங்கிளின் ஆர்ப்பரிப்பினால் ஊக்கம் பெற்றிருக்கின்றனர். 23 வயதே ஆகும் மஹீஸ் தீக்சனா, ‘நான் சிறுவயதிலிருந்தே அவரைப் பார்த்து வருகிறேன். அப்போதிருந்தே அவர் எங்களுக்காக கொடியசைத்து ஆதரவு தெரிவித்து வருகிறார். அவரின் இறப்பை அறிந்து ஒட்டுமொத்த அணியுமே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறோம்.’ என்கிறார் தீக்சனா.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் பதவி வழங்க தயாராக இருந்தபோதும் அதை எப்போதுமே தவிர்த்தே வந்திருக்கிறார் பெர்சி அங்கிள். மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்களுமே பெர்சி அங்கிள் மீது பெரிய மரியாதை வைத்திருக்கின்றனர். 2015 ஆம் ஆண்டில் இந்திய அணி இலங்கைக்கு சென்றிருந்த போது அங்கு விராட் கோலி பெர்சி அங்கிளை இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு அழைத்து மரியாதை செய்திருக்கிறார்.

Percy Uncle

Percy Uncle

நியூசிலாந்து அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவரான மார்டின் க்ரோ ஒரு முறை தன்னுடைய ஆட்டநாயகன் விருதை பெர்சி அங்கிளுக்கு வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறார்.  சமீபத்தில் ஆசியக்கோப்பைக்காக இந்திய அணி இலங்கைக்கு சென்றிருந்த போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பெர்சி அங்கிளை அவரின் வீட்டிற்கே நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்திருந்தார்.

கிரிக்கெட் உலகின் மாபெரும் ரசிகருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

Leave A Reply

Your email address will not be published.