ரம்சி ராசீக் 5 மாதங்களின் பின் பிணையில் விடுவிப்பு

இலங்கையில் பேஸ்புக்கில் தெரிவிக்கப்பட்ட கருத்தொன்றுக்காக கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ரம்சி ராசீக் 5 மாதங்கள் 8 நாட்களின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

“சிறுநீரகப் பாதிப்பு, மூட்டு அழற்சி, ஈரல் சிக்கல்கள், காலில் காயங்கள் என ராசீக் பல வித நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். இப்படியிருந்தும், இவருக்குப் பிணை வழங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நீண்டதொரு போராட்டத்தின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றம் இவருக்குப் பிணை வழங்கியது. ஐந்து மாதங்களின் பின்னர் ராசீக் தன் குடும்பத்தோடு மீள இணைந்துள்ளார்” என்று அவருக்காக நீதிமன்றத்தில் வாதிட்ட ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ரம்சி ராசீக் ஒரு சமூக செயற்பாட்டாளர். ஏப்ரல் மாதம் திடீரெனெ இவருக்கு முகநூல் மற்றும் பிற வலைத் தளங்களூடு மிரட்டல்கள் விடுக்கப்படத் தொடங்கின. சமூக வலைத்தளங்களில் எழுதுவதை நிறுத்திய ராசீக், தன் குழந்தைகளைக் குறித்தும் பயமடையத் தொடங்கினார். ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இவர் பொலிஸாரிடம் தனக்கு விடுக்கப்படும் மிரட்டல்களைக் குறித்து முறையிட்டார். ஆனால், இந்த மிரட்டல்களைக் குறித்து விசாரணை செய்யாமல் பொலிஸார் ராசீக்கைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்” – என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரச ஊழியர் ரம்சி ராசீக் கடந்த கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அதற்குச் சில நாட்களுக்கு முன்னர் அவர் எழுதிய ‘பேஸ்புக்’ பதிவில், “முஸ்லிம்கள் சிந்தனா ரீதியான ஜிகாத்தில் ஈடுபட வேண்டும்” என்று கூறியிருந்தார் எனவும், அது இனங்களுக்கிடையில் வன்முறையைத் தூண்டுவதற்கான அழைப்பு எனவும், அதற்கு முன்னரும் அவர் இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்துள்ளார் எனவும் பொலிஸார் அவரை ஆஜர்படுத்திய கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.

ஆனால், தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என ரம்சீ ராசிக் கூறினார்.

ரம்சி ராசீக் இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு எதிராகவும் இனவாதத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்தவர் என்பதற்கான ஆதாரங்களை சட்டத்தரணி சுமந்திரன் அப்போது நீதிமன்றத்திடம் முன்வைத்திருந்தார்.

சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ரம்சி ராசீக் சுகவீனம் அடைந்திருக்கின்றார் எனவும், அவரது உடல்நிலை மோசமடைந்து கொண்டிருக்கின்றது எனவும், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாமல் இருக்கின்றது எனவும் அம்னஸ்டி இண்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன.

இந்தநிலையிலேயே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ரம்சி ராசீக்குக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.