35 சபைகளிலும் தமிழரசுக் கட்சி தலைமைக்கு முயற்சிக்கும்! – அரசியல் குழுவில் முடிவு .

தமிழர் தாயகத்தில் 35 க்கும் குறையாத உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அந்தச் சபைகளில் எல்லாம் மேயர், நகர பிதா, தவிசாளர் பதவிகளைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி முழுமூச்சாக முயற்சிக்கும்.

நேற்று சனிக்கிழமை மாலை வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் இவ்வாறான முடிவு எட்டப்பட்டது எனத் தெரியவந்தது.

கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரசியல் குழுவின் உறுப்பினர்களான பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், எக்ஸ். குலநாயகம், எஸ்.குகதாசன் எம்.பி., ப.சத்தியலிங்கம் எம்.பி., இரா.சாணக்கியன் எம்.பி., சி.சிறீதரன் எம்.பி., த.கலையரசன் ஆகியோர் பங்குபற்றினர். அரசியல் குழுவின் மற்றொரு உறுப்பினரான கி. துரரைராஜசிங்கம் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவில்லை.

இலங்கைத் தமிழரசுக் கட்சி நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் 35 க்கும் குறையாக சபைகளில் முன்னிலை பெற்றுள்ளது. அத்தகைய முன்னிலை பெற்ற ஒவ்வொரு சபையிலும் தலைமைப் பதவியைப் பெறுவதற்கு கட்சி முயற்சிக்க வேண்டும் என்றும், இது தொடர்பில் ஏனைய தமிழ் பேசும் கட்சிகளோடு ஆதரவு கேட்டு தொடர்பாடல் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

குறிப்பாக கிழக்கில் தமிழ் பேசும் கட்சிகள் என்ற முறையில் முஸ்லிம்களின் கட்சிகளோடும் ஆதரவு கேட்டு பேச்சு நடத்துவது குறித்தும் மேற்படி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது எனவும் அறியவந்தது.

Leave A Reply

Your email address will not be published.