கிரிக்கெட்டுக்குள் பாரிய மோசடிகள் – சபையில் சஜித் காட்டம்.

“இலங்கையில் 220 இலட்சம் மக்களின் மனதில் குடிகொண்டுள்ள கிரிக்கெட் விளையாட்டுடன் நிறைவேற்று அதிகாரம், சட்ட மன்றம், நீதித்துறை, திருடர்கள் மற்றும் இலஞ்ச, ஊழல் மோசடிக்காரர்கள் சூழ்ச்சியாடுவதற்கு இடமளிக்க முடியாது.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இடைக்கால கிரிக்கெட் குழுவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நமது நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு அனைத்து அம்சங்களிலும் முன்னேற்றம் காண வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிரிக்கெட் விளையாட்டின் காரணமாக இலங்கை கிரிக்கெட் சபைக்குச் பெரும் செல்வம் சேர்ந்துள்ளது. எனவே, கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்யப் பலர் ஒன்றிணைவது இதனை நிர்வகிப்பதற்கா அல்லது இதற்குக் கிடைக்கும் பணத்தை அபகரிப்பதற்காக என ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இலங்கை கிரிக்கெட் சபை மிகவும் ஊழல் நிறைந்ததாக மாறியுள்ளது என்பது தெளிவாகின்றது. இந்தத் திருட்டுக் குகையில் உள்ள திருடர்களை வெளியேற்றி, தெளிவான முறையில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வந்து, கிரிக்கெட் விளையாட்டை அரசியல் அற்றதாக்கி நட்பு வட்டார சங்கங்களும் கேளிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

பிரபுக்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் கிரிக்கெட்டில் கிடைக்கும் பணத்தைத் திருடுகின்றனர்.

நாம் ஒருபோதும் நீதிமன்றத்தை விமர்சிக்கவில்லை. எனினும், கிரிக்கெட் தொடர்பாக வழங்கப்பட்ட உத்தரவுகளில் கடுமையான சிக்கல்கள் உள்ளன. 220 இலட்சம் மக்களின் மனதில் குடிகொண்டுள்ள இந்த விளையாட்டுடன் நிறைவேற்று அதிகாரம், சட்ட மன்றம், நீதித்துறை, திருடர்கள் மற்றும் இலஞ்ச, ஊழல் மோசடிக்காரர்கள் சூழ்ச்சியாடுவதற்கு இடமளிக்க முடியாது.

கிரிக்கெட்டைத் திருடர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால், அது வேறு உகந்த தீர்மானமாக இருக்க வேண்டும். இந்நாட்டில் கிரிக்கெட் சாம்பியனான திறமையான வீரர்கள் இருக்கின்றார்கள். இவ்வாறானவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டும்.

தற்போது விளையாட்டுத்துறை அமைச்சரால் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு ஜனாதிபதியும் அவரது அடியாட்களும் கிரிக்கெட்டில் தலையீடு செய்ய ஆரம்பித்து விட்டனர். இவ்வாறான காரணங்களுக்காகவே நானும், எனது குழுவினரும் திருடர்களுடன் இணைந்து ஆட்சியமைக்க விரும்பவில்லை.

நீதித்துறையின் சுயாதீனத்துக்குக் கிரிக்கெட் திருடர்களால் அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். விளையாட்டுத்துறை அமைச்சர் எடுக்கும் எந்தவொரு சரியான முடிவுக்கும் நாம் துணை நிற்போம். தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கூட தேசிய அணிக்குள் நுழையும் வகையில் நிர்வாகம் மாற்றப்பட வேண்டும்.

அரசில் உள்ள ஏனையவர்களுக்கு முதுகெலும்பு இருந்தால் இதற்குத் துணை நிற்க வேண்டும். இது ஒரு பெறுமதியான வளம் என்பதால், தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் அல்லாமல் தேசிய நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் இவை மேற்கொள்ளப்பட வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.