போர்நிறுத்தத்தை இஸ்ரேல், ஹமாஸ் நிராகரித்தன : காஸா பாதுகாப்புக்கு இஸ்ரேல் உறுதி

மத்திய கிழக்கின் காஸா பகுதியில் தற்பொழுது நடந்துவரும் போருக்குப் பின் அப்பகுதியின் ஒட்டுமொத்த பாதுகாப்புப் பணியை தான் மேற்கொள்ளப் போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

அத்துடன், காஸாவுக்குள் உதவி சென்று சேரவும் அங்குள்ள பிணைக்கைதிகள் வெளியேறும் வகையிலும் அவ்வப்பொழுது சிறிய அளவில் போர்நிறுத்தங்கள் செய்வது பற்றி இஸ்ரேல் ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

எனினும், அனைத்துலக ரீதியில் நெருக்குதல் அதிகரித்துள்ள போதிலும் ஒட்டுமொத்தப் போர்நிறுத்தக் கோரிக்கையை அவர் நிராகரித்தார்.

அமெரிக்க ஏபிசி தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் திரு நெட்டன்யாகு, போருக்குப் கால வரையின்றி பின் காஸா பகுதியின் பாதுகாப்புப் பொறுப்பை தமது நாடு ஏற்கவிருக்கும் என்றும் விளக்கினார்.

“இஸ்ரேல் காலவரையின்றி பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும் என்று எண்ணுகிறேன், ஏனெனில், அவ்வாறு பாதுகாப்புப் பொறுப்பை ஏற்காவிடில் என்ன நடக்கும் என்பது நம் எல்லோர்க்கும் கண்கூடாகத் தெரிகிறது,” என்று திங்கட்கிழமையன்று சொன்னார்.

மனிதநேய அடிப்படையில் போர்நிறுத்த அறிவிப்புக் குறித்துக் கேட்கப்பட்டதற்கு பதிலளித்த திரு நெட்டன்யாகு, பொதுவான ஒரு போர்நிறுத்தம் தமது நாட்டின் போருக்கு பங்கம் விளைவிக்கும் என்று தெரிவித்தார்.

“ஆனால், உத்திபூர்வமான சிறிய அளவிலான சண்டைநிறுத்தம், இங்கொன்றும் அங்கொன்றுமாக சில மணிநேரங்கள் இதற்கு முன்னரும் நடப்பில் இருந்துள்ளன. நிலைமையைக் கருத்தில்கொண்டு உதவி, மனிதநேயப் பொருட்கள் வர அல்லது பிணைக்கைதிகள் வெளியேற அவை சாத்தியமே,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

“ஆனால், பொதுவான போர்நிறுத்தம் இருக்கப் போவதில்லை,” என்றார்.

இஸ்ரேல், ஹமாஸ் இயக்கம் ஆகிய இரண்டுமே காஸாவில் அனைத்துலக நெருக்குதலைப் பொருட்படுத்தாது பொதுவான போர்நிறுத்தத்தை நிராகரித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.