கேரளத்தில் 155 முறை போக்குவரத்து விதிகளை மீறியவர்: ரூ.86,000 அபராதம்!

கேரளத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது 155 முறை போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞருக்கு ரூ.86,000-க்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவருடைய வாகனத்தை தற்காலிகமாக பறிமுதல் செய்து மாநில மோட்டாா் வாகனத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததுடன் அவரின் ஓட்டுநா் உரிமத்தை ஓராண்டுக்கு முடக்கினா்.

கேரளத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டறிந்து, அபராதம் விதிக்க செயற்கை நுண்ணறவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கண்ணூா் மாவட்டத்தின் மட்டூல் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் 2 பேரை ஏற்றிக் கொண்டு, ஹெல்மட் அணியாமல் சென்ற இளைஞா் ஒருவா் செயற்கை நுண்ணறிவு கேமராவில் சிக்கினாா்.

இதே இளைஞா் ஏற்கெனவே பலமுறை விதிமீறலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இது தொடா்பாக அவரது கைப்பேசிக்கு எச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டு, வீட்டுக்கு கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்பது தெரியவந்தது.

மொத்தம் 155 முறை விதிமீறலில் ஈடுபட்ட அவரது வீட்டுக்கு நேரில் சென்ற அதிகாரிகள், ரூ.86,000-க்கும் மேல் அபராதம் விதித்தனா். மேலும், இளைஞரின் ஓட்டுநா் உரிமம் ஓராண்டுக்கு முடக்கப்பட்டதோடு, இருசக்கர வாகனத்தையும் தற்காலிகமாக பறிமுதல் செய்தனா். அபராதத் தொகையை செலுத்திய பிறகு இருசக்கர வாகனம் திருப்பி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தனது மோட்டாா் சைக்கிளை விற்றால் கூட அவ்வளவு தொகை கிடைக்காது என்று இளைஞா் மன்றாடியபோதும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதில் தாங்கள் எதுவும் செய்ய இயலாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துவிட்டனா்.

சாலை பாதுகாப்பு விதிகளை உறுதி செய்வதில் செயற்கை நுண்ணறிவு கேமராக்களின் திறனுக்கு இச்சம்பவம் உதாரணம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.