தேசிய தேர்தல்களை உடனே நடத்துங்கள்! – ரணிலைக் கோருகின்றார் சம்பந்தன்.

“இலங்கையில் தற்போதைய அரசின் செயற்பாடுகள் சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்துள்ளன. ஜனாதிபதி மீதும், அமைச்சர்கள் மீதும் நாட்டு மக்கள் மாத்திரமல்ல, சர்வதேசம் கூட நம்பிக்கை இழந்து வருகின்றது. எனவே, உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலையும், ஜனாதிபதித் தேர்தலையும் நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒத்துழைக்க வேண்டும்.”

இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி முக்கிய கருமங்களில் தான் நினைத்த மாதிரி பிடிவாதமாகச் செயற்படுகின்றார். அமைச்சர்களும் தாங்கள் நினைத்த மாதிரி வெவ்வேறு திசைகளில் பயணிக்கின்றார்கள்.

நாட்டு மக்கள் தொடர்பில் இவர்களுக்குத் துளியளவும் அக்கறை இல்லை. சுயலாப அரசியலே இவர்களின் நோக்கமாக உள்ளது.

இது நாட்டின் முன்னேற்றத்துக்கு உகந்தது அல்ல. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கமைய உடனடியாகத் தேசிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். தளம்பல் இல்லாத நிலையான ஆட்சி வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.