தீப்பற்றி எரிந்த குடிசை வீடுகள்…தஞ்சாவூரில் சோகம்!

தஞ்சாவூரில் பட்டாசு வெடிக்கும் போது தீப்பற்றி, 3 குடிசை வீடுகள் எரிந்து சேதமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் சேகர், கும்பகோணத்தில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டுக்காரர் சாமிநாதன், லோடு ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர்களின் வீடுகள் அருகருகே உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அப்பகுதி சிறுவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.

அப்போது சிறுவர்கள் வைத்த ராக்கெட் அங்கிருந்த குடிசை வீட்டின் மீது விழுந்து மளமளவெனத் தீப் பிடித்தது. பின்னர் அருகிலிருந்த வீடுகளிலும் அடுத்தடுத்து தீ பரவத் தொடங்கியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் 10 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமாகின. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.