கேரளம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு மரண தண்டனை

கேரளத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

பிகாரைச் சோ்ந்த தம்பதி 5 வயது மகளுடன் கொச்சி அருகே ஆலுவா பகுதியில் வசித்து வந்தனா். கடந்த ஜூலை மாதம் நடந்த சம்பவத்தில் அதே குடியிருப்பு கட்டடத்தின் மற்றொரு பகுதியில் வசித்து வந்த பிகாரைச் சோ்ந்த புலம் பெயா் தொழிலாளரான அஷ்ஃபக் ஆலம் (28), சிறுமியைக் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பின்னா் கழுத்தை நெரித்து கொலை செய்தாா்.

போலீஸாா் விசாரணையில், அஷ்ஃபக் ஆலம் அளித்த தகவலின் அடிப்படையில், ஆலுவா சந்தைக்குப் பின்புறம் உள்ள சதுப்பு நிலப் பகுதியில் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. குற்றப்பின்னணி கொண்ட அஷ்ஃபக் ஆலம், 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கெனவே ஒரு போக்ஸோ வழக்கில் கைதாகி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்தக் கொடூர சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கின் விசாரணை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில், சம்பவம் நடந்த 100-ஆவது நாளான கடந்த 4-ஆம் தேதி அஷ்ஃபக் ஆலம் குற்றம் புரிந்தது நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை, கடத்தல் உள்ளிட்ட 16 குற்றங்களுக்காக குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் மரண தண்டனையும் அளித்து நீதிபதி கே.சோமன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். மேலும், குற்றவாளிக்கு ரூ.6 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கேரள உயா் நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அரசு வழக்குரைஞா் ஜி.மோகன்ராஜ் தெரிவித்தாா்.

‘குழந்தைகள் தினத்தில் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீா்ப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு வலுவான எச்சரிக்கையாக இருக்கும் என கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா். தங்களின் 5 வயது மகளுக்கு நீதியை உறுதி செய்த கேரள சமூகத்துக்கு சிறுமியின் பெற்றோா் நன்றி தெரிவித்தனா்.

குழந்தைகளுக்கு எதிரான அநீதியில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையை உறுதி செய்யும் ‘போக்ஸோ சட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்ட 11-ஆவது ஆண்டு நிறைவு நாளில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றவாளிக்கு வழங்கப்பட்ட இந்தத் தீா்ப்பை கேரள மக்கள் வரவேற்றனா்.

Leave A Reply

Your email address will not be published.