நிதி வேண்டாம்; நீதியே வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவிப்பு.

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்காக நாங்கள் 14 வருடங்களாகத் தொடர்ந்து போராடி வருவது நிதிக்காக அல்ல, நீதி கோரியே” – என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் யாழ்ப்பாணம் மாவட்ட சங்கத்தின் தலைவி சிவபாதம் இளங்கோதை தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2024ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் காணாமல்போனவர்களுக்கு எனப் பெரும் நிதி ஒதுக்கியுள்ளார்கள்.

எங்கள் பிள்ளைகள் வீதிகளில் அல்லது காடுகளில் காணாமல்போனவர்கள் அல்லர். மன்னிப்பு அளிப்பதாக அரசும் படைகளும் கூறியதைக் கேட்டு எங்கள் பிள்ளைகள் சரணடைந்தார்கள். எங்கள் வீடுகளுக்குள் புகுந்தும் எங்கள் பிள்ளைகளைக் கடத்திச் சென்றார்கள் – கைது செய்தார்கள். அதன்பின்னரே எங்கள் பிள்ளைகளை அவர்கள் காணாமல் ஆக்கியுள்ளார்கள்.

இது தொடர்பில், சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் கோரி வருகிறோம்.

விசாரணைகளை மேற்கொள்ளாது நிதியைத் தர முயல்கின்றனர். காணாமல்போனோருக்கான நிதியைத் தென்னிலங்கையில் காணாமல்போனோருக்கு வழங்குங்கள். எங்களுக்கு இந்தப் பணம் வேண்டாம். நாங்கள் தேடுவது எங்கள் பிள்ளைகளையே.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்களில் 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். ஆனாலும், நாங்கள் தொடர்ந்து எங்கள் உறவுகளைத் தேடி வருகின்றோம்.

எனவே, பணம் தந்து எங்களை ஏமாற்ற வேண்டாம். நாங்கள் காசு வாங்க வர மாட்டோம். எங்களுக்கு நீதியே வேண்டும்.

14 வருடங்களாக நாங்கள் தொடர்ந்து போராடுவது காசுக்காக அல்ல. எங்கள் பிள்ளைகளுக்காகவே நாங்கள் தொடர்ந்து போராடி வருகின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.