செந்தில் பாலாஜி உடல்நிலையில் தொடரும் சிக்கல்

செந்தில் பாலாஜிக்கு ரத்த அழுத்தம் சற்றும் குறையாத காரணத்தால் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடந்த ஜூன் 13 ஆம் தேதி நள்ளிரவு, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அப்போதே நெஞ்சில் வலி ஏற்பட்டதாக கூறி காரில் சரிந்த செந்தில் பாலாஜி, உடனடியாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இதயத்தில் 3 அடைப்பு இருப்பதாக தெரிவித்தனர். இதனை மத்திய அரசின் இ.எஸ்.ஐ. மருத்துவர்களும் உறுதி செய்தனர். உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவிரி மருத்துவமனையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

உடல்நலம் சற்று முன்னேற்றம் அடைந்த நிலையில், மருத்துவர்கள் கண்காணிப்பில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து ஏற்பட்ட பல பிரச்சனைகளால் அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு வந்தார். தொடர்ந்து தூக்கமின்மையால் அவதிப்பட்ட செந்தில்பாலாஜிக்கு, புதன்கிழமை மாலை தலை சுற்றல் ஏற்பட்டதாக தெரிகிறது. முதலுதவி கொடுத்த சிறை நிர்வாகம், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல திட்டமிட்டனர்.

தீவிர தலைவலி, வாந்தி உள்ளிட்ட பிரச்சனையால் புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து செல்லப்பட்டார். அவரை உடனடியாக பரிசோதித்த சிறப்பு மருத்துவக் குழு, மேல் சிகிச்சைக்காகவும், பாதுகாப்பை கருத்தில் கொண்டும், அன்றிரவே ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றினர். ஓமந்தூரார் மருத்துவமனையில், இதயவியல் துறையின் கீழ், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, 6 ஆவது தளத்தில் உள்ள தனி அறையில் சிகிச்சை தொடங்கியது. சுமார் ஒரு மாதமாக 2 மணிநேரம் மட்டுமே தூங்குவது, பசியின்மை, தலைவலி உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாக மருத்துவர்களிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், இதயவியல் மருத்துவர் மனோகரன், ராஜிவ் காந்தி மருத்துவமனையின் குடல் மற்றும் வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர் நாக்நாத்பாபு , நரம்பியல் மருத்துவர்கள் கொண்டகுழு ஒருங்கிணைந்த சிகிச்சையை தொடர திட்டமிட்டது. நாள்தோறும் 11 மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் செந்தில்பாலாஜி, அதற்கு ஏற்ப உணவு உட்கொள்ளாதது, தீவிர மன அழுத்ததிற்கு தள்ளியதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அவரின் உடல் எடை சுமார் 8 கிலோ குறைந்ததையும், ரத்த அழுத்தம் தொடர்ந்து குறையாமல் இருப்பதையும் மருத்துவக்குழு உறுதி செய்தது.

இதனால் தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். 150/100 MmHg-ல் தொடர்ந்து இருக்கும் ரத்த அழுத்தத்தை குறைக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. வயிற்றுப்புண், குடல் புண்ணுக்கு காலையிலேயே சிறப்பு குழுவினர் சிகிச்சையை தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பரிசோதனையில் செந்தில் பாலாஜியின் பித்தப்பையில் கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவக்குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.