10 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இந்தியாவால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

பெருந்தோட்டப் பகுதிகளில் 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தேசிய வீடமைப்பு அதிகார சபை மற்றும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களுடன் இரண்டு தனி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

6 மாகாணங்களின் 11 மாவட்டங்களில் நான்காம் கட்டத்தின் கீழ் இந்திய வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 60 ஆயிரம் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் முதல் இரண்டு கட்டங்களிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 46 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ், பெருந்தோட்டப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் 4 ஆயிரம் வீடமைப்புத் திட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையுடனான இந்தியாவின் மக்களை மையப்படுத்திய அபிவிருத்தி ஒத்துழைப்பு கூட்டுறவில் வீடமைப்புத் திட்டம் முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய வீட்டுத் திட்டத்துக்கு அப்பால், இலங்கையின் 25 மாவட்டங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்களின் கீழ் 2 ஆயிரத்து 400 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.