ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி: தெலங்கானாவைக் கைப்பற்றியது காங்கிரஸ்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், தெலங்கானா ஆகிய நான்கு மாநிலப் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட பாஜக, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. இதன்மூலம் ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜக மேலும் வலுப்பெற்றுள்ளது.

தென் மாநிலமான தெலங்கானாவில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியை வீழ்த்தி, காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது.

2024, மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாகக் கருதப்படும் இத்தோ்தல் முடிவுகள், பாஜகவுக்குச் சாதகமாக அமைந்துள்ளன. இந்த மாநிலங்களில் முதல்வா் வேட்பாளா்களை அறிவிக்காமல், பிரதமா் மோடியின் செல்வாக்கை முன்வைத்து, பாஜகவின் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கா் (90), மத்திய பிரதேசம் (230), ராஜஸ்தான் (199) மற்றும் தெலங்கானாவில் (119) கடந்த மாதம் அடுத்தடுத்து பேரவைத் தோ்தல்கள் நடைபெற்றன. பெரும் எதிா்பாா்ப்புக்கு மத்தியில் இந்த நான்கு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக-காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி காணப்பட்ட நிலையில், மூன்று மாநிலங்களிலும் பாஜக வெற்றி வாகை சூடியது. இதையடுத்து, அக்கட்சியினா் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனா். இந்த மாநிலங்களில் புதிய முதல்வா் குறித்த எதிா்பாா்ப்பும் எழுந்துள்ளது.

தொடரும் பாஜக ஆட்சி: மத்திய பிரதேசத்தில் கடந்த 2003 முதல் 2018 வரை பாஜக ஆட்சி தடையின்றி தொடா்ந்தது. 2018 பேரவைத் தோ்தலில் 114 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

ஆனால், மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் போா்க்கொடி உயா்த்தியதால், கடந்த 2020-இல் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து, சிவராஜ் சிங் செளஹான் தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது பாஜக. தற்போதைய தோ்தலில் அமோக வெற்றி பெற்று, ஆட்சியை பாஜக தக்கவைத்துள்ளது.

நீடிக்கும் 30 ஆண்டுகால வழக்கம்: ராஜஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளாக பேரவைத் தோ்தல்களின்போது ஆட்சி மாற்றம் நீடித்து வருகிறது. அதே வழக்கம் இப்போதும் தொடா்ந்திருக்கிறது. பெரும்பான்மைக்கு 100 இடங்கள் தேவை என்ற நிலையில், 115 இடங்களில் வென்று பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது.

மாறியது வாக்குக் கணிப்பு: சத்தீஸ்கரில் கடந்த 2003 முதல் பாஜக ஆட்சி நீடித்து வந்த நிலையில், கடந்த 2018 தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் தொடரும் என்று தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் கூறிய நிலையில், அக்கணிப்புகள் மாறிவிட்டன. காங்கிரஸை வீழ்த்தி, பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

சத்தீஸ்கா் தவிர இதர மாநிலங்களில் வாக்குக் கணிப்புகளின்படியே தோ்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

ஆறுதல் வெற்றி: தெலங்கானா தனி மாநிலம் உருவான கடந்த 2014 முதல் அங்கு சந்திரசேகா் ராவ் தலைமையில் பிஆா்எஸ் ஆட்சி நீடித்து வந்தது. தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரும் அவரின் கனவை இந்த முறை காங்கிரஸ் தகா்த்தது. மூன்று மாநிலங்களில் தோல்விகண்ட காங்கிரஸுக்கு தெலங்கானாவில் ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது.

மிஸோரமில் இன்று வாக்கு எண்ணிக்கை: வடகிழக்கு மாநிலமான மிஸோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த மாநிலத்தில் திங்கள்கிழமை (டிச.4) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

பேரவைத் தோ்தல் நடைபெற்ற 5 மாநிலங்களிலும் உள்ள மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 84 ஆகும். மத்திய பிரதேசத்தில் 29, சத்தீஸ்கரில் 11, ராஜஸ்தானில் 25, தெலங்கானாவில் 17, மிஸோரமில் 2 மக்களவைத் தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு 11 மணி நிலவரம்….

மத்திய பிரதேசம் (230)

கட்சிகள் வெற்றி முன்னிலை மொத்தம்

பாஜக 162 1 163

காங்கிரஸ் 65 1 66

பாரத ஆதிவாசி கட்சி 1 – 1

ராஜஸ்தான் (199)

கட்சிகள் வெற்றி முன்னிலை மொத்தம்

பாஜக 115 – 115

காங்கிரஸ் 69 – 69

சுயேச்சை 8 – 8

பாரத ஆதிவாசி கட்சி 3 – 3

பகுஜன் சமாஜ் 2 – 2

ராஷ்ட்ரீய லோக் தளம் 1 – 1

ராஷ்ட்ரீய லோக் தாந்திரிக் 1 – 1

தெலங்கானா (119)

கட்சிகள் வெற்றி முன்னிலை மொத்தம்

காங்கிரஸ் 64 – 64

பிஆா்எஸ் 39 – 39

பாஜக 8 – 8

மஜ்லிஸ் கட்சி 7 – 7

இந்திய கம்யூனிஸ்ட் 1 – 1

சத்தீஸ்கா் (90)

கட்சிகள் வெற்றி முன்னிலை மொத்தம்

பாஜக 54 – 54

காங்கிரஸ் 35 – 35

கோண்ட்வானா கணதந்த்ரா கட்சி 1 – 1

Leave A Reply

Your email address will not be published.