காஸாவில் நடந்து வரும் சண்டையில் இஸ்ரேலுக்குப் பேரிழப்பு.

காஸாவில் நடந்து வரும் சண்டையில் தனது படையினருக்குக் கடுமையான இழப்பு ஏற்பட்டதாக இஸ்ரேல் புதன்கிழமை அறிவித்தது.

சண்டையில் ஒரு மாதத்திற்கும் மேற்பட்ட காலத்தில் ஏற்பட்ட பேரிழப்பு இது என்று இஸ்‌ரேல் தெரிவித்துள்ளது.

காஸாவின் வடக்கு மற்றும் தெற்கு வட்டாரங்களில் சண்டை கடுமையாகி உள்ளது.

குறிப்பாக, மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்துவதற்காக ஐநா கொண்டு வந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்த மறுநாளிலிருந்து தாக்குதல் தீவிரமாகி உள்ளது.

அதேநேரம், பொதுமக்கள் மீது இஸ்ரேல் ‘கண்மூடித்தனமாக’ குண்டுகளை வீசுவதால் அனைத்துலக எதிர்ப்புக்கு அது ஆளாகும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார்.

போர் நிறுத்தத்திற்கு அனைத்துலக அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டாலும் தமது ராணுவம் தொடர்ந்து சண்டையில் ஈடுபடும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

“இறுதிவரை, வெற்றி கிட்டும்வரை, ஹமாஸ் ஒழிக்கப்படும்வரை தொடர்ந்து போரிடுவோம்,” என்று அவர் தமது ராணுவத்தினரிடம் வானொலி மூலம் தெரிவித்தார்.

“மிகுந்த வேதனையை நாம் எதிர்கொள்ளும் நிலையிலும் அனைத்துலக அழுத்தத்திற்கு இடையிலும் நான் இதனைச் சொல்கிறேன். நம்மை எதுவும் தடுத்து நிறுத்தாது,” என்றும் திரு நெட்டன்யாகு கூறியுள்ளார்.

24 மணி நேரத்தில் இரண்டு படைத் தளபதிகள் உள்ளிட்ட தனது 10 ராணுவ வீரர்கள் போரில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

அக்டோபர் 31ஆம் தேதி, 15 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பிறகு ஒரே நாளில் அதிகமான வீரர்கள் இஸ்ரேலியத் தரப்பில் உயிரிழந்தது இப்போதுதான்.

காஸாவின் வடக்கு நகரான ஷெஜாயாவில் ஆக அதிகம் பேர் கொல்லப்பட்டனர்.

கட்டடம் ஒன்றில் ஹமாஸ் போராளிகள் மீது தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ வீரர்களை மீட்கச் சென்ற மற்றோர் இஸ்ரேலிய ராணுவத் துருப்பினர் அந்நகரில்தான் பதுங்கியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.