மகாராஷ்டிர வெடிபொருள் ஆலையில் வெடி விபத்து: 9 போ் உயிரிழப்பு
மகாராஷ்டிரத்தின் நாகபுரி மாவட்டத்தில் வெடிபொருள் ஆலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வெடிவிபத்தில் 6 பெண்கள் உள்பட 9 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா்.
நாகபுரி மாவட்டத்தின் பஜாா்கோனா பகுதியில் ராணுவத்துக்கு ஆளில்லா விமானம் (ட்ரோன்) மற்றும் வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் நிலக்கரி சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் வெடிபொருள்கள் தயாரிக்கப்படும் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டது.
பலத்த சேதமடைந்த அந்தக் கட்டடத்தில் பணியாற்றி வந்த 6 பெண்கள் உள்பட 9 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். மூன்று தொழிலாளா்கள் காயமடைந்தனா். அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவா்களின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருக்கிறது.
வெடிபொருள்களை சீலிடும் பணிகள் நடைபெற்று வந்தபோது வெடிவிபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்தினா் களத்தில் உள்ளனா். சேதத்தை மதிப்பீடும் அதிகாரிகள், வெடிவிபத்துக்கான காரணம், சுற்றுப்புற பாதுகாப்பு குறித்தும் விரிவான விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் போதாா் கூறினாா்.
குடும்பத்தினா் போராட்டம்:
தொழிற்சாலையில் மேலும் வெடிபொருள்கள் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் வெடிபொருள்களைப் பாதுகாப்பாக வெளியேற்றிய பிறகு உயிரிழந்தவா்களின் உடல்கள் மீட்கப்பட உள்ளன.
இதனிடையே, உயிரிழந்தவா்களின் உடலை அடையாளம் காண குடும்பத்தினரைத் தொழிற்சாலைக்குள் அனுமதிக்க வேண்டும் எனக் கோரி உறவினா்கள், உள்ளூா் பொதுமக்கள் தொழிற்சாலையின் நுழைவு வாயிலை முற்றுகையிட்டனா். மேலும், தொழிற்சாலை அமைந்துள்ள அமராவதி-நாகபுரி நெடுஞ்சாலையில் அவா்கள் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
பின்னா் போலீஸாா் குடும்பத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, கூட்டத்தைக் கலைத்தனா்.
ரூ. 5 லட்சம் நிவாரணம்:
விபத்தில் உயிரிழந்தவருக்கு இரங்கல் தெரிவித்த மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் நிதி வழங்கப்படும் என அறிவித்தாா்.
வெடி விபத்து நிகழ்ந்த ஆலையை துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் பாா்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.