வயதான தம்பதிக்கு ரூ.22,300 அபராதம் – நீதிமன்றம் கண்டிப்பு

ரயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக வயதான தம்பதியிடம் ரூ.22,300 அபராதம் வசூலிக்கப்பட்ட வழக்கில் பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அலோக் குமார் என்பவர் கடந்த ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி தனது பெற்றோருக்கு ஏசி கோச்சில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அவர்களின் பயணித்தின்போது ரயில் டிக்கெட் இல்லாமல் பயணித்ததாக கூறி அந்த வயதான தம்பதியிடம் இருந்து ரூ.22,300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் டிக்கெட்டின் PNR எண்ணை பரிசோதித்த டிக்கெட் பரிசோதகர், அவர்களது டிக்கெட்டிற்கு சீட் ஒதுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த தம்பதியின் மகன் அலோக், இது குறித்து IRCTC இணையதளத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இந்த விவகாரம் குறித்து தெற்கு ரயில்வேயிடம் கேட்டபோது அவருக்கு முறையான பதில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நம்பிக்கையை இழந்த அவர், பெங்களூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், வயதான தம்பதியிடம் கடுமையாக நடந்துக்கொண்டதற்கு இழப்பீடாக ரூ.30,000 அளிக்க IRCTC-க்கு உத்தரவிட்டது. அதுமட்டுமன்றி அவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகையை திரும்ப அளிக்கவும் உத்தவிரவிட்டது. மேலும் வழக்காடிய செலவுக்காக அலோக் குமாருக்கு ரூ.10,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டிக்கெட் இல்லாத பயணிகள் ஏசி கோச்சில் அமர வைக்கப்படும் வீடியோவை பகிர்ந்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.