”தேசியக் கீதம் சிங்களத்தில் மாத்திரமே; அதிகாரத்தை பகிர முடியாது”

நாட்டில் தேசிய இனப் பிரச்சினை என்று எதுவும் இல்லை எனவும், அவ்வாறு இருந்தால், சிங்களவர்களிடையே தெற்கில் தமிழர்கள் இணைந்து வழமாட்டார்கள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கைப் ஒரு சிறிய நாட்டிற்கு அதிகாரப் பகிர்வு அல்லது சமஷ்டி ஆட்சிமுறைமை எந்தவொரு சந்தர்பத்திலும் பொறுந்தாது எனவும் தெரிவித்துள்ள அவர், அதிகாரத்தை பரவலாக்க முடியுமெனக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் வெளியாகும் ஆங்கில ஊடகமான Ceylon Todayவிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

(தெரிவு செய்யப்பட்ட கேள்விகளும் பதில்களும்)

இந்த நாட்டில் தேசிய இனப்பிரச்சினை என்ற ஒன்று காணப்படுகின்றதா?

தேசிய இனப் பிரச்சினை என்று எதுவும் இல்லை. அவ்வாறு இருந்தால், சிங்களவர்களிடையே தெற்கில் 50% தமிழர்கள் இருக்க மாட்டார்கள். வியாபார நடவடிக்கைகள், தெற்கில் உள்ள மற்றவர்களைப் போலவே தமிழர்களால் கையாளப்படுகிறது. ஒரு இனப் பிரச்சினை இருப்பதாக ஒரு சில சிங்கள மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் முன்வைக்கின்றனர். ஏதேனும் சிக்கல் இருந்தால், அது அரசியலமைப்பிலும் நமது சட்டத்திலும் பிரதிபலித்திருக்கும். மலேசியா போன்ற தீவிர சட்டங்கள் எங்களிடம் இல்லை, அங்கு காணி அல்லது கார் வாங்கும்போது கூட பெரும்பான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மலேசியாவில் உள்ள பிற சமூகங்கள் இதைப் பற்றி முணுமுணுக்கவில்லை. அவர்கள் ஒரு தனி நாட்டுக்காகவோ அல்லது சமஷ்டி ஆட்சிக்காகவோ போராட மாட்டார்கள்.

அதிகாரப்பரவல் தொடர்பில்?

நான் ஒருபோதும் எந்தவொரு மாகாணத்திற்கும் அதிகாரப் பகிர்வுக்கு விருப்பம் வெளியிட்டதில்லை, எனினும் மத்திய அரசின் அதிகாரங்களை பரவலாக்க முடியும், இது மிகவும் பயனுள்ள நிர்வாக முறையாக அமையும். நம் நாடு சிறியது. 50 மாநிலங்களைக் கொண்ட அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளுக்கு அதிகாரப் பரவலாக்கள் அமைப்பு சிறப்பாக இருக்கும். எங்கள் நாட்டின் 22 மில்லியன் மக்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் மக்கள் தொகை 80 மில்லியனாக காணப்படுகின்றது. ஆகவே இது சரியான ஒரு முன்மொழிவாக அமையாது.

மாகாண சபை முறைமையை ஒழிக்க வேண்டுமென நீங்கள் கருத்து வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனவே?

நான் தெரிவித்த கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் ஆரம்பத்தில் இருந்தே 19ஆவது திருத்தத்திற்கு எதிராக இருந்தேன், ஏனென்றால் நாங்கள் ஒரு ஒற்றையாட்சி நாடு. ஆனால் நாங்கள் 13ஆவது திருத்தத்தின் ஊடாக ஒரு சமஷ்டி நாடாக மாறிக்கொண்டிருக்கின்றோம். நான் முற்றிலும் அதற்கு எதிரானவன். நான் 13ஆவது திருத்தத்திற்கு எதிராக இருப்பதால், மாகாண சபை முறைமைமையும் நான் எதிர்க்கின்றேனா? என ஊடகங்கள் என்னிடம் கேட்டன. ஆகவே நான் அதே நிலைப்பாட்டில் இருப்பதாகவே கூறினேன். எனினும் மாகாண சபை முறைமையை இல்லதொழிக்க வேண்டுமென நான் கூறவில்லை. நான் ஒரு இராஜாங்க அமைச்சராக, இருக்கும்போது நான் வெளியிடும் கருத்தை நியாயப்படுத்த வேண்டும். எனவே இப்போது நான் மாகாண சபைத் தொட்டர்பில் ஆராய்ந்து வருகின்றேன். இதனை வைத்திருப்பதன் மூலம் மத்திய அரசுக்கு என்ன சுமை, பொதுமக்கள் பயனடைகிறார்களா என்பது தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றேன். அரசாங்கம் தேவையற்ற செலவினங்களைச் செய்கிறதா என்பது தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றேன். அதனைவிட கடந்த இரண்டு வருடங்களாக மாகாண சபைகள் காணப்படவில்லை. நாடு பின்னோக்கிச் சென்றதா? என்பதை அறிய விரும்புகிறேன். எனது அதானிப்புகளின் அடிப்படையில், எனது விரிவான அறிக்கையை அரசிடம் சமர்ப்பிப்பேன். அதன் பின்னர் தீர்மானிக்க வேண்டியது அவர்களுடைய பொறுப்பு. இது இலங்கை-இந்திய ஒப்பந்தத்தையும் உள்ளடக்கியது. அங்குள்ள சிக்கல்கள் தொடர்பிலும் நாம் ஆராய வேண்டும். மாகாண சபைகள் இல்லாவிடின், அனைத்து அதிகாரங்களும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு செல்லும். ஆகவே என்னுடைய ஆய்வில் மாகாண சபைகள் அவசியம் என கண்டறியப்பட்டால் அதையே எனது அறிக்கையாக சமர்ப்பிப்பேன். ஒரு மாதத்திற்குள் நான் எனது அறிக்கையை சமர்பிப்பேன்.

தமிழர்கள் இன்னும் ஒரு தனி நாட்டை நாடுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா?

பிரிவினைவாதிகள் மற்றும் பிரிவினைவாதத்தை ஆதரிப்பவர்கள் மட்டுமே அதை நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றனர். சாதாரண தமிழ் மக்கள் அத்தகைய தனி நாட்டை விரும்பவில்லை. எனவே நான் நினைப்பது என்னவென்றால், ஒரு நாட்டிற்கு ஒரு தேசிய மொழி இருக்க வேண்டும், இரண்டு அல்லது மூன்று அல்ல. தேசிய கீதம் சிங்களத்திலும் மட்டுமே பாடப்பட வேண்டும், அதுவே எங்கள் அடையாளம். இந்தியாவில் தேசிய கீதம் பெங்காலி மொழியில் பாடப்படுகிறது.

இந்தியாவில் தேசிய கீதம் எழுதிய மொழியை (பெங்காலி) அவர்கள் பொக்கிஷமாகக் கருதுகிறார்கள், அது அவர்களின் அடையாளம். எனவே, தமிழர்கள் உட்பட அனைத்து சமூகங்களும் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாட வேண்டும். அது இப்போது உத்தியோபூர்வமானது. அந்த நாட்களில் தமிழர்கள் இதை தமிழில் பாடியிருக்கலாம், ஆனால் அந்த நேரத்தில் தமிழர்களிடையே பிரிவினைவாத சிந்தனை இல்லை. இப்போது அவர்கள் ஒரு விடயத்தைக் கூற முயற்சிக்கிறார்கள். போரின் போது, சிங்களவர்களும் முஸ்லிம்களும் புலிகள் அமைப்பால் துரத்தப்பட்டு கொல்லப்பட்டனர், அதனாலாயே நாங்கள் அதனை எதிர்க்கின்றோம்.

Leave A Reply

Your email address will not be published.