மக்களை வதைக்கும் அரசுக்கு விரைவில் முடிவு கட்டுவோம்! – சஜித் சூளுரை

மின் கட்டண அதிகரித்து மக்களை வதைக்கும் அரசுக்கு விரைவில் முடிவு கட்டுவோம்! – உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்த பின் சஜித் சூளுரை

தான்தோன்றித்தனமாக மின்சாரக் கட்டணத்தை அதிகரித்து நாட்டு மக்களை வதைக்கும் ரணில் – மொட்டு அரசுக்கு விரைவில் முடிவு கட்டுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சூளுரைத்தார்.

“மின்சாரக் கட்டண அதிகரிப்பின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. எனவே, தற்போதுள்ள மின் கட்டணத்தைக் குறைக்குமாறு உத்தரவிட வேண்டும்” – என்று கோரி எதிர்க்கட்சித் தலைவர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை இன்று தாக்கல் செய்தார்.

சட்டத்தரணி ஷியாமலி அத்துகோரல ஊடாக எதிர்க்கட்சித் தலைவர் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.

மனுவைத் தாக்கல் செய்த பின்னர், அது தொடர்பில் உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்துத் தெரிவித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபை, மின்சக்தி அமைச்சர், அந்த அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினர் மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபைக்கு 52 பில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளது. எனினும், நியாமற்ற வகையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் மூலம் 60 இலட்சம் மின்சார பாவனையாளர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது எனத் தீர்ப்பளிக்கக் கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.