வடக்கு – கிழக்கின் பொருளாதார வளங்களை அழித்துவிட்டு அபிவிருத்தி தொடர்பில் பேசுகிறீர்களா? அரசின் செயலே தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான சூழ்நிலையை நிர்ப்பந்தித்துள்ளது என்று சுரேஷ் சுட்டிக்காட்டு.

“நாட்டின் அந்நியச் செலாவணியை சேமிப்பதற்கும் விவசாயத்தைத் தொழிற்சாலையாக மாற்றுவதற்கும் உழைத்த வடக்கு – கிழக்கின் பொருளாதார வளங்களை அழித்துவிட்டு அதற்காக ஒரு வருத்தம்கூட தெரிவிக்காதவர்கள் இன்று வடக்கின் பொருளாதார அபிவிருத்தி குறித்து பேசுவது தேர்தல் பிரசாரத்திற்காக மட்டுமே. தென்னிலங்கை அரசியல் சக்திகளிடத்தில் அனைத்து தேசிய இனங்களையும் ஐக்கியப்படுத்தி நாட்டுப் பற்றுடன் இலங்கையை வளமிக்க நாடாக மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் இல்லை என்பதும் நாட்டு மக்களைப் பிளவுபடுத்தி தமக்கான வாக்கைப் பெற்றுக்கொள்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன என்பதும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய வடக்கு மாகாண விஜயமும் நிரூபித்துள்ளது.”

இவ்வாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வடக்கு மாகாண விஜயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விபரம் வருமாறு:-

“இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இரண்டாவது ஆண்டின் தொடக்கத்தில் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்காகவும், ஏனைய சந்திப்புக்களை நிகழ்த்துவதற்காகவும் வடக்கு மாகாணத்திற்குக் கடந்த 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

அவரது வருகை தொடர்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. மிச்சம் மிகுதியாக உள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முடிவுகள் எட்டப்பட வேண்டும், காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாண சபைத் தேர்தல் நடைபெற வேண்டும்.

பௌத்த சிங்களமயமாக்கலை நோக்கமாகக் கொண்டு தமிழர் பிரதேசங்களில் பலாத்காரமாக நிர்மாணிக்கப்படும் பௌத்த கோயில்களின் பணிகள் நிறுத்தப்பட வேண்டும்.

இவை தொடர்பில் ஜனாதிபதி தெளிவான பதிலை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தமது விஜயத்தின்போது மேற்குறிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எந்தவிதமான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களையோ தெளிவுபடுத்தல்களையோ மேற்கொள்ளவில்லை.

அவர் தொடர்ச்சியாகப் பேசி வரும் அபிவிருத்தி தொடர்பில் மாத்திரமே பேசினார். இதற்கு முன்னரும் அபிவிருத்தி தொடர்பில் அவர் பல்வேறு கருத்துகளைக் கூறியிருக்கின்றார். ஆனால், அவற்றுக்கான முறையான நிதி ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இந்த அரசின் மேல் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது.

ஜனாதிபதிக்கும் சிங்கள அரசியல் தலைமைகளுக்கும் கடந்தகாலத்தை நினைவுபடுத்த விரும்புகின்றோம். யுத்தத்திற்கு முன்பாக, முழு இலங்கைக்கும் தேவையான விவசாய உற்பத்திகளையும் கடல் உணவுகளையும் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் பெருமளவில் வழங்கி வந்தன. முப்பது வருட யுத்தத்தில் எமது விவசாயம் முற்றாக அழிக்கப்பட்டது. மக்கள் இடம்பெயர்ந்தார்கள். விவசாயக் காணிகள் தரிசு நிலங்களாகவும் காடாகவும் மாறின. இருந்த ஒருசில தொழிற்சாலைகளும் யுத்தத்தைக் காரணம் காட்டி அழித்தொழிக்கப்பட்டன. முழு இலங்கைக்கும் உணவளித்த மக்கள் தமக்கே வாழ்வாதாரம் இல்லாத ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, அந்த மக்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு வழிசமைத்துக் கொடுக்க வேண்டிய அரசு அது தொடர்பில் எத்தகைய பிரத்தியேக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அதுமட்டுமன்றி, காடாக மாறியுள்ள அவர்களது காணிகளை விடுவிப்பதற்கே அவர்கள் கடந்த பதினான்கு வருடங்களாகப் போராடி வருகின்றனர்.

இந்த இலட்சணத்தில்தான், சிங்கள அரசின் செயற்பாடு இருக்கின்றதென்பதை ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டும். யுத்தத்திற்குப் பின்னர், வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் அரசின் உதவிகள் ஏதுமின்றி, தமது வாழ்வாதாரத்தையும் வாழ்க்கை முறையையும் தாமே கட்டியெழுப்பிக்கொள்வதற்காக வைராக்கியத்துடன் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

யதார்த்தங்கள் இவ்வாறிருக்கையில், ஜனாதிபதி குறிப்பிடுகின்ற வடக்கு மாகாண அபிவிருத்தி என்பது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதை நாங்கள் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதேசமயம், தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளை நிறைவேற்றுவது தொடர்பில் எந்தவிதமான ஆணித்தரமான பதில்களும் அளிக்காமல் 13 ஆவது திருத்தம் என்பது பொருளாதார அபிவிருத்திக்குப் போதுமானது என்ற கருத்தை மாத்திரம் கூறிச் சென்றிருக்கின்றார்.

13 ஆவது திருத்தம் என்பது, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மையமாகக் கொண்டது. கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதுடன், 13 அவனது திருத்தத்தினூடாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட பல அதிகாரங்கள் மீளவும் மத்திய அரசால் பறிக்கப்பட்டும் இருக்கின்றது.

இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கும், பொருளாதார அபிவிருத்திக்கும் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ப முக்கியமானது. இவை இல்லாமல், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது ஒருபோதும் சீராக நடைபெறாது. வெளிநாட்டு முதலீடுகளையும் அரசு எதிர்பார்க்க முடியாது.

இதனைப் புரிந்துகொண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தி, அதற்குரித்தான முழுமையான அதிகாரங்களை வழங்கி, சர்வதேச முதலீடுகளைக் கொண்டு வருவதற்கான அதிகாரங்களை மாகாண அரசுகளுக்கு வழங்குவதன் மூலமே இலங்கையின் பொருளாதரமும் அரசியல் ஸ்திரத்தன்மையும் வலுவடையும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பிலும் சரி, யாழ்ப்பாணத்திலும் சரி புலம்பெயர் தமிழ் மக்களின் முதலீடுகள் அவசியம் என்பதை மீண்டும் மீண்டும் கூறி வருகின்றார். கடந்த காலங்களில் தென்பகுதியிலிருந்த தமிழ் மக்களின் பொருளாதாரம் என்பது அடிக்கடி அரசு உருவாக்கிய இனக்கலவரங்களினால் நிர்மூலம் செய்யப்பட்டது.

இதன் காரணமாக, பல இலட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகளை தமிழ் மக்கள் இழந்து அகதிகளாகக் கப்பலேற்றி அனுப்பப்பட்ட வரலாறுகள் தமிழ் மக்களுக்குண்டு. இவ்வாறான ஒரு சூழ்நிலையில், புலம்பெயர் தமிழ் மக்களின் முதலீடுகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், அவற்றை எதிர்பார்ப்பதென்பது தமிழ் மக்களை மேலும் மேலும் முட்டாள்கள் என்று நினைப்பதற்கு ஒப்பாகும்.

மாகாணங்களுக்கென ஒதுக்கப்பட்ட பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்கள் போன்றவற்றை வழங்கி, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரங்களையும் மாகாணங்களுக்கு வழங்கி, சர்வதேச முதலீடுகளைக் கொண்டுவருவதற்கான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதனூடாகத்தான் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளுக்குப் பாதுகாப்புக் கிட்டும் என்பதை ஜனாதிபதியும் அவருடைய தலைமையிலான அரசும் புரிந்துகொள்ள வேண்டும். இதை வழங்குவதனூடாக ஜனாதிபதி குறிப்பிடும் வடக்கைப் பொருளாதார மையமாக மாற்றலாம் என்பது மட்டுமன்றி, தென் ஆசியாவின் நிதி ஆதார மையமாகவும் மாற்ற முடியும்.

இவை ஒருபுறமிருக்க, யுத்தம் முடிவுற்று பதினான்கு வருடங்கள் கடந்த நிலையில், தமிழ் மக்கள் தமது காணிகளை முழுமையாக விடுவிக்கக் கோரிவருகின்ற போதிலும், இன்னமும் அது முழுமையடையவில்லை. இப்போதும்கூட இடம்பெயர்ந்த மக்கள் யாழ்ப்பாணத்தில் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களது நிலங்கள் காணிகளை முப்படையினரும் பலாத்காரமாக தம்வசம் வைத்திருக்கின்றனர். அவை விடுவிக்கப்பட வேண்டுமாயின், ஜனாதிபதிதான் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, மாவட்ட செயலாளர்களோ ஏனைய அதிகாரிகளோ எடுக்க முடியாது.

2025 ஆம் ஆண்டுக்குள் மீள்குடியேற்றம் முழுமைபெற வேண்டும் என்று கூறும் ஜனாதிபதி, காணிகளை விடுவிப்பதற்கான ஆக்கபூர்வமான அறிவுறுத்தல்களோ நடவடிக்கைகளோ எடுக்கவில்லை என்பதுதான் யதார்த்தமானது. இத்தகைய சூழ்நிலையில், அவர் குறிப்பிட்ட காலத்திற்குள் மீள்குடியேற்றங்கள் பூரணப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுகின்றது.

அதனைப் போலவே காணாமல் ஆக்கப்ட்டோர் தொடர்பாக யுத்தம் முடிந்த காலத்திலிருந்து இன்று வரை அந்த மக்கள் போராடி வருகின்றபோதிலும்கூட அவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கோ அல்லது அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், ஜனாதிபதியைச் சந்திக்க முயற்சித்த தாய்மார்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது என்பது மிக மோசமான செயற்பாடாகும்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் நீண்ட போராட்டத்திற்கு மதிப்பளிக்காதது மட்டுமல்ல அவர்களது உறவினர்களின் இருப்பு தொடர்பில் அவர்கள் அறிந்துகொள்வதற்கான நீதியும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இத்தகைய வார்த்தை ஜாலங்கள் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு முயற்சியாகத் தென்படுகிறதே தவிர, ஜனாதிபதியின்மீதோ அவரது தலைமையின் மீதான அரசின் மீதோ நம்பிக்கை கொள்வதற்கு இடமளிக்கவில்லை. அரசின் இவ்வாறான தொடர் நடவடிக்கைகள்தான் தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான சூழ்நிலையை நிர்ப்பந்தித்துள்ளது.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.