தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு: கடலில் குளிக்கத் தடை!

காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயில்கள், பூங்காக்கள், கடற்கரைகள் உள்ளிட்ட இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் வருகை தரவுள்ளனர்.

இதனையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் பொது இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா, பெசண்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகள், வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவா் பூங்கா, தீவுத்திடல் சுற்றுலா பொருள்காட்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 15,500 காவலர்கள், 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மெரினா கடற்கரைக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை தரவுள்ள நிலையில், தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள், காவல் உதவி மையங்கள் அமைகப்பட்டுள்ளது. அவசர ஊர்திகள், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளது.

மீட்பு பணிக்காக மோட்டாா் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னாா்வலா்கள் 200 போ் தயாா் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

கடற்கரையில் குழந்தைகள் காணாமல் போனால் உடனடியாக மீட்கும் வகையில் குழந்தைகளின் கைகளில் அடையாள அட்டை கட்டிவிட காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். காவல் உதவி மையங்களில் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.